Monday, July 14, 2008

திருவண்ணாமலை

திருவண்ணாமலை இது ஒரு யாத்திரைத்தலம் மட்டுமல்ல, பிராத்தனைத் தலமும்கூட. புண்ணியபூமி என்று சொன்னால் அதற்கு உதாரணம் திருவண்ணாமலை தான். இங்கே காலடி வைக்காத ஞான தபோனர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் அற்புதங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
24 ஏக்கர் பரப்பளவில் 6 பிரகாரங்களுடன் 9 ராஜகோபுரங்களுடன் மலையடிவாரத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது ஆலயம். கிழக்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் பாதாளலிங்கேஸ்வரரைத்  தரிசிக்கலாம். படியிறங்கினால் பாதாளத்தில் இருக்கிறார் ஈஸ்வரன். ரமணமகரிஷி பலகாலம் தங்கித்தவம் செய்த இடம் இது. அதை நினைத்தாலே உடம்பு சிலிர்க்கிறது. இடதுபக்கம் கம்பத்து இளையனார் சன்னதி. அழகு கொஞ்ச காட்சி தருகிறார் முருகப்பெருமான்.
இரண்டாவது கோபுரம் வல்லான மகாராஜா கோபுரம். அருணகிரிநாதர் இதன்மீது ஏறி, தமது ஊனுடலை நீக்கிக்கொள்ள கீழேவிழுந்தபோது, முருகன் அவரைக் காப்பாற்றி அருள் செய்தாராம். முருகன் சன்னதியில் அருணகிரிநாதரும் இருப்பதைப் பார்க்கலாம்!
மூன்றாவது கோபுரம் கிளிக்கோபுரம். அருணகிரி நாதர் தன் உடலை விட்டு நீங்கி, கிளி ரூபத்தில் போய் பாரிஜாத மலர் கொண்டுவந்தார். அப்போது அவரது உடல் காணாமல் போக, கிளி ரூபத்திலேயே கந்தர் அநுபூதி பாடிய கோபுரம் இது. அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் கிளி தெரியும்.
இந்த ஆலயத்தில் செந்தூரம் அணிந்த பெரிய திருமேனியோடு சம்பந்த விநாயகர் வெகு கம்பிரமாகக் காட்சியளிக்கிறார். கயமுகாசுரனைக் கொன்று, அவன் ரத்தத்தை தம் உடலில் பூசிக் கொண்டதாக வரலாறு சொல்கிறது.
அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் அர்த்த மண்டபம் அழகிய சலவைக்கல் திருப்பணியோடு தூய்மையாக இருக்கிறது. உள்ளே அருணாச்சலேஸ்வரர், அருளே திருமேனியாகச் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற அருணாசலேஸ்வரர் சூரியன், சந்திரன், பிரம்மன், திருமால், முதலியோரால் வழிபடப்பட்ட அண்ணாமலையார் என்று அவரைப் பற்றி நினைக்க, நினைக்க மெய் மறந்து போகிறது. உடல் சிலிர்க்கிறது.
அம்பாள் சன்னதியில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வது போல உண்ணாமலையம்மை சிறிய திருவுருவில் அருட்காட்சி வழங்குகிறார். இவருக்கும் ஒரு கதை உண்டு. பார்வதி தேவி, ஒரு சமயம் விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தினாள். சூரிய சந்திரர்களாகவும், அக்னியாகவும் உள்ள அந்த கண்களை பார்வதி தேவி மூடியதால் உலகெங்கும் இருள் சூழ்ந்தது. தேவி பதறினாள், கைகளை அகற்றினாள்.
உலகை இருள் சூழச்செய்த பாவம் நீங்க, பார்வதிதேவி திருவண்ணாமலை வந்து பவழக் குன்றில் கடுந்தவம் செய்தாள். கார்த்திகைப் பரணிநாளில், பிரதோஷ காலத்தில், மலைமேல், ஜோதி உருவாகச் சிவபெருமான் தரிசனம் தந்து, தேவிக்குத் தன் இடபாகத்தைத்தந்தார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா உலகறிந்த பெருவிழாவாக நடக்கிறது. பெரிய கொப்பரை ஒன்றில் நெய்த்துணி, கற்பூரம் ஆகியவற்றைக் கொண்டு மலையுச்சில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. கோயில் முழுக்க ஔத வெள்ளத்தில் திகழும் அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.
மலையே சிவபெருமானாக விளங்கும் பௌர்ணமி அன்று இங்கே மலை வலம் வருதல் மிக்க புண்ணியத்தை தருவதாகும். மலையின் சுற்று 10 கிலோமீட்டர். மலையைச் சுற்றி வரும்போது அஷ்டலிங்கங்கள், ஆதி அண்ணாமலையார் கோவில் மற்றும் சேஷாத்ரி  சுவாமிகள் ஆசிரமம், ரமணாசிரமம் போன்றவற்றையும் தரிசிக்கலாம். மலைப்பாதை நெடுக இரவில் வெளிச்சம் பகல்போல ஜொலிக்கிறது. (உபயம்:- நடிகர் ரஜினிகாந்த்)
ஒருமுறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற சண்டைவந்தது. இருவரும் சிவபெருமான் முன்பு போய் நின்றனர். "உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் ஜெயிப்பவர்களே.. சிறந்தவர்கள்.." என்றார் சிவன்.
மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமான் போடும் பந்தயத்திற்காக காத்திருந்தனர். சிவன் திடீரென ஆதியும், அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியாக விஸ்வரூபம் எடுத்தார்.
"உங்கள் இருவரில் யார் என்னுடைய முடியையோ, அடியையோ முதலில் காண்கிறீர்களோ, அவரே எல்லோரையும் விட பெரியவர்" என்று கூறினார் சிவன்.
பிரம்மாவும், விஷ்ணுவும் போட்டிக்குத் தயாரானார்கள்.
"நான் சிவனின் திருவடியைக் காண்கிறேன்" என்று மகாவிஷ்னு பன்றியாக உருமாறி பூமியைத் தோண்டி, உள்ளே சென்றார்.
சிவனின் திருவடிகள் பாதாளம் ஏழுக்கும் கீழே சென்று கொண்டிருந்தது. விஷ்னு ஒவ்வொரு பாதாளமாக போய் கொண்டிருந்தார்.
பிரம்மா?
சிவபெருமானின் திருமுடியைக் காண்பதற்காக பிரம்மா வானுலகில் பறந்து, பறந்து சென்றார். சிவனின் திருமுடியோ அகண்ட முகடுகளைப் பிளந்து மேலே சென்று கொண்டே இருந்தது. எவ்வளவு உயரம் போயும் பிரம்மாவால் சிவனின் முடியைக் காண முடியவில்லை!
ஒருவேளை, இந்நேரம் மகாவிஷ்ணு சிவனின் அடியைக் கண்டிருப்பாரோ என்று அச்சம் வேறு. அப்போது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.
பிரம்மன் அதை தாவிப் பிடித்து,"எங்கேயிருந்து வருகிறாய்? என்று கேட்டார்.
தாழம்பூ பதில் சொன்னது. "நான் சிவனின் தலைமுடியில் இருந்து தவறி விழுந்து பல யுகங்கள் ஆகிவிட்டன. கீழேவிழுந்து கொண்டிருக்கிறேன்."
பிரம்மா சோர்ந்து போனார். தந்திரமாய் ஒரு வேலை செய்தார். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. அதனால் தாழம்பூவுடன் ஓர் ஒப்பந்தம் போட்டார்.
அதன்படி தான் சிவனின் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு (பொய்) சாட்சி சொல்லும் படியும் தாழம்பூவிடம் கேட்டார். தாழம்பூ ஒப்புக்கொள்ள, சந்தோஷமாய் கீழே இறங்கினார் பிரம்மா. அதேநேரம், சிவனின் திருவடியைத் தேடிப்போன விஷ்ணு அதைக் காணாதபடியால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி வந்து விட்டார்!
ஆனால், பிரம்மனோ,"சிவபெருமானே.. நான் உங்களின் திருமுடியைப் பார்த்துவிட்டேன்... இதோ அங்கிருந்து தாழம்பூ கொண்டுவந்திருக்கிறேன்... இதிலிருந்தே தெரிகிறதா... நான்தான் சிறந்தவன் என்று..." என்றார்.
சிவபெருமான் சினமடைந்தார். உண்மை அவருக்குத் தெரியாதா என்ன? "பிரம்மனே... பொய் சொன்ன நீ பூமியில் போய் சராசரி மனிதனாகப் பிறப்பாயாக..." என்று சாபமிட்டார். தாழம்பூவையும் சிவபெருமான் விடவில்லை. "பொய் சொன்ன நீ பூஜைக்கு லாயக்கில்லை. சிவபூஜைக்கு உன்னை புறக்கணிப்பார்கள்" என்று தூக்கியெறிந்தார்.
உண்மையைச் சொன்ன மகாவிஷ்ணுவுக்கும், மனம் திருந்தி வந்த பிரம்மனுக்கும் கடைசியில் 'சிவ பரம்பொருளே உலகின் முழு முதற்பரம் பொருள்' என்பதை உணர்த்த சிவபெருமான் தன் அருட்பெரும் ஜோதியைக் குறுக்கி, மலை உருவில் நின்றார். அந்த ஜோதியில் இருந்து சிவலிங்கத் திருவுரு ஒன்றும் வௌதப்பட்டது.
அந்த மலைதான் திருவண்ணாமலை! அந்த சிவலிங்கம்தான் அருணாச்சலேஸ்வரர்!

No comments: