Monday, July 14, 2008

கன்னியாகுமரி - பகுதி 3

கன்னியாகுமரி இந்தியாவின் இறுதித் தென்முனையில் உள்ளது. இந்தியாவை வர்ணிக்கும்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று சொல்வது வழக்கம்.
வங்காளவிரிகுடா, இந்தியப்பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் முக்கடல் முனையும் இதுதான். சூரிய உதயத்தையும் மறைவையும் இம்முனையில் காணலாம். இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை உள்ளன.
கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளுடைய அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. இது 1956 கட்டிமுடிக்கப்பட்டது. சித்திரை முழுநிலவில் நிலவும் சூரியனும் நேர்கொள்ளும் அழகைக் காணக் கண்கோடி போதாது. சூரியன் மறைவதையும் சந்திரன் எழுவதையும் ஒரே சமயத்தில் காணமுடியும்.
திருக்குறள், மனிதகுலம் என்றென்றம் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஒப்புயர்வற்ற நீதி இலக்கியமாகும். ஆத்தகைய நெறிகளை அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளிய திருவள்ளுவரை காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல் வௌதயில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழ, திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரமோ 95 அடி பிரமாண்டம்! மொத்தத்தில் 133 அடி உயர சிலை வடிவம் கண்கவர் வண்ணம். பீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் பொலிவுடன் அமைகிறது. இவ்வாறு சுற்றுச்சுவர் கொண்ட பீடமும் சிலையும் அணிமணி மண்டபமாய் அமைந்தெழுந்து, ஆழிசூழ் தென்முனையில் அழகார்ந்த ஓவியமாய் மிளிர்கிறது. பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது. ஆம். அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 1970ல் விவேகானந்தர் நினைவாலயம் அமைக்கப்பட்டது. விவேகானந்தர் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.
மேலும் கன்னியாகுமரியில் காமராஜர் நினைவு மண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான காமராஜர், நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்குவதில் வல்லவர்.
கன்னியாகுமரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முட்டம் ஓர் அழகிய கடற்கரை கிராமம். மீன்பிடிப்பு தொழிலை மையமாகக் கொண்ட இந்தக் கிராமத்தின் அழகியலை பல தமிழ் திரைப்படங்கள் படம்பிடித்திருக்கின்றன. அழகிய நில அமைப்பைக் கொண்டது முட்டம். பாறைகள் நிறைந்த கடற்கரையும் மேடு பள்ளமான நிலப்பரப்பும் வடமேற்கில் செம்மண் அகளிகளுமாக முட்டத்தின் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் இங்குள்ளது. பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் இங்குள்ளது. முட்டம் ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குவதில் ஐயமே இல்லை.

No comments: