Monday, July 14, 2008

அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் கேடிஸ்ரீ தமிழகத்தில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது குத்தாலம் எனும் ஓர் ஊர். குத்தாலத்திலிருந்து திருமணஞ்சேரி என்ற ஊருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலத்தில் குடிக்கொண்டிருக்கும் உத்தவேதீஸ்வரர் சொன்ளவாறறிவார் என்றும் அழைக்கப்படுகிறார். மிருதுமுகுளகுசாம்பிகை என்ற பெயரில் அம்பாள் இங்கு வீற்றிருக்கிறார். இத்திருத்தலத்திற்கு உத்தாலமரம் (அத்திமரம்) தலைமரமாக உள்ளது.

கோயிலின் வடதுபுறம் காவிரி ஆறு பொங்கி பாய்கிறது. இங்கு ஒரு காலத்தில் ஆற்றிடைக்குறைவாக இருந்ததாகவும், அந்தப் பகுதியில் இந்த கோயில் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் 'துருத்தி' என்ற பெயரும் இவ்விடத்திற்கு உண்டு.

அன்று பல்வேறு காரணங்களால் பல்வேறு பெயர்களில் இத்தலம் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவ்விடம் 'உத்தாலம்' என்னும் ஒருவகை ஆத்திமரங்களால் சூழப்பட்ட பெரும் காடாக இருந்தததாகவும், அதனால் இவ்விடம் 'உத்தாவகவனம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றன.

இதன் காரணமாகவே உத்தாலம் இங்கு தலமரமாக போற்றப்படுகிறது. பிற்காலத்தில் உத்தாலம் என்னும் சொல்லே 'குத்தாலம்' என்று மருவி அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தலபுராணம்

உத்தவேதீஸ்வரரின் திருவிளையாடல்கள் ஒன்றல்ல.. இரண்டல்ல.. பல பல என்றாலும், அவை அனைத்தும் சுவையானவை. அத்துனையும் அற்புதமான நிகழ்வுகள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக அம்பாள் பூமியில் அவதரித்து பெண்ணாக வளர்ந்து கடைசியில் இறைவனே அவரைத் திருமணம் செய்து கொள்ளுவதை கூறலாம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இத்திருத்தலத்தில் நிகழ்ந்திருப்பதாக புராணகால வரலாறுகள் கூறுகிறது.

ஒருமுறை அம்பாளின் வேண்டுதலுக்கிணங்கி, சிவபெருமான் அவரை பூவுலகில் பரதமுனிவரின் வேள்விக்குண்டத்தில் தோன்றி அவரது பெண்ணாக வளர்ந்து வரும்படியும், தாம் உரிய காலத்தில் உலகறிய அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினாராம். இதனையடுத்து அம்பாளும் வேள்ளிக்குண்டத்தில் தோன்றி பரதவமுனிவரின் மகளாக வளர்ந்து வந்தார். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்நிலையில் ஒருநாள் சிவபெருமான் அவர் முன் தோன்றி, அம்பாளின் கைப்பற்றினார். உடனே அம்பாள் சிவபெருமானைப் பார்த்து, இதுவல்ல நான் வேண்டியது. பரதவமுனிவரிடம் நீங்கள் பெண் கேட்டு இந்த உலகம் அறிய என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்..'' என்றார். அம்பாளின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் பரதவமுனிவரிடம் பெண் கேட்டு சென்றார். அவரும் தன் மகளான அம்பாளை சந்தோஷமாக சிவபெருமானுக்கு திருமணம் செய்துதருவதாக கூறினார். இதனை அடுத்து சிவபெருமான் அம்பாளை உலகறியத் திருமணம் செய்து கொண்டார். இங்கு இறைவனாகிய சிவபெருமான் தான் கூறியவாறு நடந்து கொண்டதால் 'சொன்னவாறறிவார்'' என்று பெயர் பெற்றார். அன்று அவருக்கு குடையாக வந்த வேதம் 'உத்தால' மரமாயிற்று.

இத்தலநாயகியான அம்பாள் வேள்விக்குடியில் தோன்றியதும், திருமணஞ்சேரியில் திருக்கல்யாணம் செய்து கொண்டதும், பிறகு பாலிகைகளை திருமுனைப்பாடியில் கரைத்ததும், கடைசியாக திருத்துருத்தியில் கிரகப்பிரவேசம் செய்து கொண்டதும் சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

எந்த ஒரு கோயிலிலும் இல்லாத அதிசயமாக இத்திருத்தலத்தில் இரண்டு அம்பாள் சன்னதிகள் இருப்பது சிறப்பு. ஒன்று பாலாம்பிகை சன்னதி. மற்றொன்று நறுஞ்சாந்து இளமுலையம்மன் சன்னதி. இச்சன்னதி கோயிலுக்குள் உள்ளது. இச்சன்னதிக்கு எதிரில் ஒரு பலகணி உள்ளது. அதற்கு மேற்கில் உத்தாலமரம் உள்ளது. அங்குதான் உத்தவேதீஸ்வரர் தோன்றியதாக கருதப்படுகிறது. அவரது திருவடிகள் அங்குதான் காணப்படுகிறது. அந்தப் பலகணி வழியாக உத்தவேதீஸ்வரரை பார்ப்பதாக ஒரு ஐதீகம் இங்கு நிலவுகிறது. இவர் திருமணத்திற்கு முன் தோன்றிய அம்பாள்.

உத்தவேதீஸ்வரர் திருமணத்திற்கு பின் தோன்றிய அம்பாள் உத்தால மரத்திற்கு வடபுறம் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் உள்ள மிருது முகுளகுசாம்பிக்கையாகும். இவரே முக்கியமான அம்பாளாகும். இத்தலத்தில் இறைவன் பகல்வேளையில் மட்டும் தங்கி இரவில் அருகில் உள்ள திருவேள்விக்குடிக்குச் சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.

கோயில் அமைப்பு

இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு இராஜகோபுரம் உள்ளது . கோபுர வாசலை அடுத்துப் பரந்த முன்வெளியில் கொடிமரம், பலிபீடம் நந்தி ஆகியவையும், இடப்புறம் கோயிலின் புண்ணிய தீர்த்தமான பதுமதீர்த்தக்குளமும், அதன் கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சிறிய ஆலயமும் அமைந்துள்ளது. கொடிமரத்தை அடுத்த உத்தாலமரம் அமைந்துள்ளது. இதன் அடிப்பகுதியைச் சுற்றிலும் மேடை அமைக்கப்பட்டு உத்தவேதீஸ்வரின் இரு பாதுகைகள் உள்ளது சிறப்பு.

இடப்பக்கம் தெற்கு நோக்கிய சன்னதியில் பிரதான அம்பாள் எழுந்தருளியுள்ளார். அதனைச் சுற்றி அகன்ற வெளித்திருச்சுற்று. இது தற்போது உபயோகத்தில் இல்லை. தென்மேற்கில் தலவிநாயகரான துணை வந்த விநயாகரை வழிபட்டு இறைவனின் கருவறைக்கு செல்லலாம். இங்கு இறைவன் இலிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார். அதுபோல் தென்புறம் கருவறைச்சுவரில் தடசிணாமூர்த்தியை அடுத்து செம்பியன் மாதேவியடிகளின் திருஉருவச்சிலை உள்ளது. மேற்கில் பாலாம்பிக்கை சன்னதி உள்ளது. அவர் இங்கு கன்னிக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். வெளிப்புறம் அரும்பன்னவனமுலையம்மை, அனைத்து அலங்காரங்களுடன் சிரித்த முகத்துடன காட்சியளிக்கிறார்.

பூஜைகள்

தினமும் ஐந்து காலபூஜைகள் இங்கு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் உத்திராட்டாதி நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவமும், கார்த்திகை மாதம் நான்காம், ஐந்தாம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோல் ஆடிக் கார்த்திகையில் சுப்பிரமணியருக்கு லட்சார்ச்சனையும், நவராத்திரி மற்றும் சிவராத்திரி விழாக்களும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

பிராத்தனைகள்

ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 48 நாட்கள் பதுமதீர்த்தக்குளத்தில் நீராடி இத்திருத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு, இங்குள்ள சிவாச்சாரியார்கள் கொடுக்கும் மருந்தை உட்க்கொண்டால் தீராதநோய்கள் எல்லாம் தீரும் என்ற ஓர் நம்பிக்கை இங்கு அதிகம் நிலவுகிறது. அதுபோல் கன்னிப்பெண்கள் இங்குள்ள பாலாம்பிகைக்கு மலர் மாலை அணிவித்து வழிப்பட்டால் நல்ல குணமுள்ள மணமகன் கிடைப்பான் என்றும் கூறப்படுகிறது.

No comments: