Monday, July 14, 2008

குற்றாலம் - பகுதி 2

குற்றாலம் தென்னாட்டின் மூலிகைக் குளியலரை. அடர்ந்த வானாந்திரங்களும், பச்சை மலைத்தொடரும், மூலிகைப் புதர்களும்,அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி. ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். இயற்கை அன்னை சற்றும் வஞ்சகமில்லாமல் வாரி வழங்கிய வெள்ளிச் சரிகை வேய்ந்த பச்சைப் பட்டாடை அணிந்த மலைமகள். தென்மேற்குத் தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்கள், கேரளாவின் தென்மலையில் பெய்யும் மழை நீர் நதியாக உருவெடுத்து, வனாந்திரங்கள், மலையிடுக்குகள், மரத்தடிகள், மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் சரிந்து அருவிகளாக உடலையும் மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம். கிட்டத்தட்ட 550 அடி உயரம் உள்ள மலைத்தொடர்களின் ஒரு பகுதி கேரளத்தின் உட்புறமும் மறு பகுதி குமரியை நோக்கியும் வளைந்து செல்கின்றன. அருவியில் இருந்து வழிந்தோடும் சிற்றாறுகளின் உபயத்தில் பச்சைக் கம்பளம் விரிந்து வயல்வெளிகளாலும் தோப்புக்களாலும், தேக்கு, பலா மரங்களாலும் நிறைந்த சமவெளிகள் சூழ்ந்த சிற்றூர்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. திருநெல்வேலியில் இருந்து 50கி மீ தொலைவில் உள்ளது. இங்கே மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பழைய அருவி, பேரருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன. ஜூன் மாதம் தொடங்கும் சாரல் ஆகஸ்டு இறுதி வரை தொடரும். அருவிகளில் தண்ணீர் பொங்கி வரும். இந்த அருவி நீர் பல்வேறு மூலிகைகளைக் குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனி 1817லிலேயே ஒரு கமிட்டியை அமைத்து அதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்துள்ளனர். டாக்டர் வொயிட் என்பவர் 2000 வகையான மலர்களையும், செடிகளையும் இந்த மலைகளில் இனம் கண்டுள்ளார். மலையின் மீது ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பல வகைகள் காய்க்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை.
கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இதை மலைகளின் இளவரசி என்று அழைப்பார்கள். பல வன விலங்குகளையும் அடர்ந்த காடுகள், பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏரிகள் போன்றவன்றை உள்ளடக்கியது இந்த மலைச்சிகரம். தானியங்கள், பழத்தோட்டங்கள், ஊசியிலை மரங்கள் அரியவகை மூலிகைகள் இங்கே தாராளமாக கிடைக்கிறது.
இராமேஸ்வரம் வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

No comments: