Monday, July 14, 2008

வால்பாறை

வால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்
விடியற்காலை ஆறு மணிக்கு கோவையில் இருந்து கிளம்பினோம். இந்த பயணம் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன். அம்மா அப்பா தங்கை நான் நால்வர். நண்பர்களுடன் இரண்டு மாதம் முன்னர் செல்ல இருந்த வால்பாறைக்கு குடும்பத்துடன் செல்கிறேன். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்ல வேண்டும். காலை உணவினை பொள்ளாச்சியில் முடித்து, செல்லும் வழியில் இருந்த ஆழியார் அணையில் வண்டி நின்றது.
ஆச்சரியபட வைத்த ஆழியார் அணை :
நாங்கள் தான் அணையை பார்வையிட அன்றைய தினம் முதன்முதலில் சென்றோம். கூடவே ஒரு ஜோடிப்புறாக்கள். தோட்டம் சரியாக பராமரிக்கபடவில்லை என்ற வருத்தத்துடன் உள்ளே உளவினோம். நீண்ட படிகள் ஏறி தண்ணீர் தேக்கத்தை காணச்சென்ற போது அங்கே ஓர் அழகிய ரம்மிய காட்சி காத்திருந்தது. வாழ்வில் மிக ரசித்த காட்சியில் இது மூன்றாம் இடத்தை பிடிக்கின்றது. எல்லா நேரமும் இவ்வளவு அழகான காட்சி இதே இடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள். அந்த மேகங்களை எப்படியேனும் தாண்டி வௌதயே வரவேண்டும் என்று துடித்த சூரியக்கதிர்கள். அந்த கதிர்கள் தூரத்தே இருந்த மலையில் அடிவாரத்தில் தண்ணீர் மீது பட்டு தெறித்த காட்சி
அந்தமான் தீவுகள் சென்றிருந்த போது, ஓரு கடற்கரையில் நாங்கள் நால்வர் மட்டும் இருந்தோம். அந்தி சாயும் பொழுது. கண்ணின் பார்வை எவ்வளவு தூரம் தெரியுமோ அவ்வளவு தூரம் கடல். இளநீல நிறத்தில் நீர். இடப்பக்கம் சின்ன மலைக்குன்று. தூரத்தில் சில குன்றுகள். வலப்பக்கம் சூரியன் மறைய காத்திருந்தது. அற்புதம் என்னவெனில் கடலில் அலைகள் ஏதும் இல்லை. முட்டி அளவு தண்ணீர் மட்டுமே சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு. அந்த நேரத்தில் புகைப்படங்களில் ஆர்வம் ஆரம்பிக்காத நேரம். கருவியில் படம்பிடிக்காமல் போனாலும் இன்றும் கண் முன்னே விரிகின்றது.
ஆழியார் அணையில் சிறிது நேரம் கழித்துவிட்டு, எதிரே இருந்த மீன் காட்சியகத்திற்கு சென்றோம். இங்கு மீன்களும் அழகு, அதனைவிட அழகு நேர்த்தியாக மீன்களுக்கு கீழே அடிக்கி வைத்திருந்த கற்கள். வித வித வண்ணங்களில், வேறு வேறு வடிவங்களில், மிக நேர்த்தி. கண்டிப்பாக இந்த சின்ன காட்சியகத்தை அட இங்க என்ன இருக்க போகுது என்று விட்டுவிடாதீர்கள்.
தேயிலை தோட்ட தேன்:மலை ஏறத்துவங்கியதும் சின்னதாக ஓரு அருவி இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. இரண்டே நிமிடங்களில் அங்கே நான் முதலில் அருவியில் குளிக்க, அப்பாவும் வாகன ஓட்டுனர் விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டனர். முந்தைய நாள் கோவை குற்றாலத்தில் குளித்ததை விட நீரின் வெப்பம் சற்று கூடுதலாக இருந்தது. அரை மணி நேரம் அங்கேயே நீரில் அமர்ந்திருந்தோம். பின்னர் இன்னும் பார்க்க நிறைய இருக்கின்றது என வௌதயே வந்துவிட்டநூம். அப்பா கொஞ்ச நேரம் மரம் நிழலில், அருவின் ஓசையில், மெல்லிய காற்றில் திட்டு ஒன்று உறங்கினார். இந்த சமயம் விசுவின் காதல் கதை வௌதவந்தது. தான் எப்படி தன் மனைவியை காதலித்து கைப்பிடித்தார், பிரச்சனைகள் என்ன, எப்படி இப்போது சமாளிக்கிறார்,குழந்தை, தொழில் என்று பேசிக்கொண்டே இருந்தார். அண்ணா அண்ணா என்று தான் என்னை அழைத்தார். அந்த மனிதனுக்குள் தான் எத்தனை அனுபவம், இவை அனைத்தையும் மூடிக்கொண்டு பேசியபடியே பயணம் முழுக்க வந்தார்.
மொத்தம் நாற்பது ஊசிமுனை வளைவுகள் (Hairpin Bend). மெதுவாக வண்டி ஏறியது. வழியில் எங்கெங்கெல்லாம் அழகான காட்சி தென்படுகின்றதோ அங்கெல்லாம் நின்றது. மற்ற ஓட்டுனராக இருந்தால் சலிப்புற்று போயிருப்பார்கள். வேறு எங்கும் இதுவரை காணக்கிடைக்காத அளவிற்கு எங்கும் தேயிலைத்தோட்டங்கள். வால்பாறையை அடைந்ததும் அப்பாவின் வங்கி கிளைக்கு சென்று எங்கு தங்கலாம் என விசாரித்தோம். மதிய உணவினை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு சோலையார் அணைக்கு கிளம்பினோம்.
சோலையார் அணை :சோலையார் அணை சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தது. மெதுவாக வண்டி ஊர்ந்து சென்றது. அணையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம். ஒரு வண்டி மட்டும் செல்லக்கூடிய மண் பாதை. விசு லாவகமாக வண்டி ஓட்டி சென்றார். வழியில் இருவர் வண்டியை வழிமறித்தனர். ஒரு மலையாளகாரர், மற்றொருவர் தமிழர். Fullஆக இருந்தார். பாத்து போங்க அங்க யானை ஒன்னு இருக்கு.. . ஏதோ சாதாரணமாக, டீ சாப்பிடுகின்றீர்களா என்பது போல சொன்னார். யானை ஏதாச்சும் செய்யுமா? என எங்கள் வண்டியில் இருந்து. அவரும் சலிக்காமல். நேத்து ஒரு பஸ்ஸை வழிமறிச்சி, வெரட்டிடுச்சி. மெதுவா போனா எதுவும் பண்ணாது, பயப்பட வேண்டாம்.. வடிவேலு வேலு திரைப்படத்தில் சொல்லுவார் பயப்படதாவங்க எல்லாம் பயப்படுறவங்க கிட்ட பயப்படாம போ பயப்படாம போன்னு சொல்றீங்களே .. வண்டி சீறிக்கொண்டு சென்றது. ஓட்டலை நோக்கி. அருகே இருந்த மார்கெட்டிற்கு சென்று இரவு எங்கு உண்ணலாம் என்று தேடினோம். கண்டுபிடித்தோம். உண்டநூம். குடும்ப சபை கூடி முக்கிய அறிவிப்புகள், முடிவுகள் எடுத்து உறங்கினோம்.
காலை 4 மணிக்கு அப்பா எல்லோரையும் எழுப்பிவிட்டார். வாங்க இரவினை ரசியுங்கள் என்று படாதபாடு படுத்திவிட்டார். மெட்டை மாடிக்கு சென்று நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை கண்டு, குளிர் தாங்காமல் மீண்டும் போர்வைக்குள் புகுந்தேன். கலைஞரின் கட்டுரைகள் புத்தகத்தை படித்தபடி மீண்டும் தூங்கினேன். தூங்கினோம். ஒழுங்காக காலை ஆறு மணிக்கு எழுந்திருந்தால் நல்ல நடை சென்றிருக்கலாம்.

காலை நேராக ஆணைமுடி சிகரத்திற்கு சென்றோம். வழியில் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றோம். அங்கே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விநாயகர் சிலை அற்புதமாக இருந்தது. அந்த கோவிலில் இருக்கும் பூசாரி ரசிக்கவல்ல மனிதர். எழுபத்தி இரண்டு வயதாகின்றது. An interesting humorous wonderful Personality (இது பாலச்சந்தர், பாரதிராஜா மாதிரி வசனங்கள் நடுவே பீட்டர் விடும் ஒரு முயற்சி ) . விசுவும் அவரும் செம கலக்கல். ஆணைமுடி என்கின்ற கிராமத்தில் தேநீர் அருந்தினோம். அங்கே எங்களோடு சிவா (3092) என்பவர் சேர்ந்து கொண்டார். சிவா உள்ளூர்வாசி. அப்பா காலத்தில் திருநெல்வேலியில் இருந்து இங்கே வந்துவிட்டனர். தொழிற்சாலையில் பணி புரிகின்றார். நாங்கள் சென்ற தினம் விடுமுறையில் இருந்தார். அந்த ஊரைப்பற்றியும் தொழிலாளிகளின் கஷ்டங்களை பற்றியும் சொன்னார். எங்களை ஆணைமுடி சிகரத்திற்கு அழைத்து சென்றார். ஆணைமுடி சிகரம் , தென் இந்தியாவில் மேகக்கூட்டங்கள் வரும் மிக உயர்ந்த சிகரமாம். கலக்கலான இடம். அருகே சின்ன முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார். சுயம்பு கோவில்.
அங்கிருந்து தேயிலை தோட்ட நடுவே பிருந்தாவனம் போல இடம் ஒன்றுக்கு அழைத்து சொன்றார். ஒவ்வொரு செடியின் மகிமை, இடம் பற்றி, மரம் பற்றி ஏராளமான விஷயம் சொன்னார். மூன்று மகன்கள். அடுத்த முறை செல்லும் போது ஆணை முடியில் ஒரு வீடு எடுத்து கொடுத்து, சமையலுக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார். (அடுத்த பயணம் நண்பர்களோடு விரைவில் !!!) ஆரஞ்சு தோட்டத்திற்கு சென்றோம். வால்பாறையினை சுத்தி வந்தோம். மதியம் உணவு முடித்து மீண்டும் கோவைக்கு பயணித்தோம்.
நிச்சயமாக நேரம் போதவில்லை. மேலும் பெற்றோர்களுடன் சென்றதால் அதிக இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயம் மூன்று நாட்கள் தங்கி நன்றாக ரசிக்க ஏராளமான இடம் இங்கே இருக்கின்றது.
பார்க்க வேண்டிய இடங்கள்:-1. சோலையார் அணை2. நீரணை3. அதிரம்பள்ளி அருவி (20 கி.மீ) (புன்னகை மன்னன் அருவி)4. ஆனைமுடி சிகரம்5. பூஞ்சோலை6. பாலாஜி கோவில்7. சித்தி விநாயகர் கோவில்8. காடம்பறை அணை9. குரங்கு அருவி (Monkey Falls)
எங்கு தங்குவது:-ஒரே ஒரு நல்ல விடுதி மட்டும் இருக்கின்றது. தங்கலாம் !!! : Green Hill Hotels P.Ltd, StateBank Road, Valparai Ph: 044523- 222861 . மின்னஞ்சல் : greenhillhotel@hotmail.com
எப்படி செல்வது:-கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். வால்பாறையில் ஜீப்புகள் கிடைக்கின்றது. அல்லது கோவையில் இருந்தே ஒரு வண்டி வைத்துக்கொண்டு போகலாம், வழியில் நின்று ஆர அமர ரசிக்கலாம்.
உணவு:வௌதயூருக்கு செல்லும் போது இந்த உணவு பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். வால்பாறையில் எங்கு விசாரித்ததிலும் ஒரே ஒரு ஓட்டலில் மட்டும் சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார்கள். உணவு நன்றாக கிடைக்கும். லட்சுமி செட்டிநாடு மெஸ். ஐந்து சகோதரர்கள் நடத்துகின்றார்கள். இவர்களை விசாரித்தால் கூட எங்கெல்லாம் செல்லலாம் என்று உதவுவார்கள்.
வால்பாறை போன்ற இடங்களில் இங்கு தான் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது, அவரவர் ரசனைக்கேற்றவாரு எங்கும் நின்று ரசிக்கலாம். இதுவரை வால்பாறையை சிற்றுலா தளமாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அப்படி அறிவிக்காத்தால் இன்னும் இந்த அழகு கெடாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதில் ஆனந்தம் தான்.

No comments: