வீதஹல்யர் எனும் சிலாத முனிவரின் மனைவி பெயர் சித்ரவதி என்பதாகும். இவர்களுக்குப் புத்திரப்பேறு இல்லாததால் சிலாத முனிவர் சிவனை நோக்கித் தவம் செய்யலானார். சிவபெருமான் அவர் முன் தோன்றி, ''சிலாதா, யாகம் புரிவதற்காக நீ நிலத்தினை உழும்போது என்னையொத்த அழகு வாய்ந்த புதல்வன் ஒருவனை அடைவாய்'' என்றார். அவ்வாறே சிலாதர் யாகம் செய்வதற்காக நிலத்தை உழும்போது உழுசாலில் ஒரு பொற்பெட்டி தட்டுப்படலாயிற்று. அதனைச் சிலாத முனிவர் திறந்து பார்க்க அதனுள் அழகு வாய்ந்த குழந்தை இருந்தது. இக்குழந்தை நான்கு கால்களுடனும் சடாமுடியுடனும் இருந்தது. இதற்கு விரகன் என்று பெயரிட்டனர். சிலாத முனிவரின் புத்திரர் ஆனதால் கைலாதி என்றும் இக்குழந்தை அழைக்கப்பட்டது.
இவர் (அக்குழந்தை) உமாதேவி கையிலையை விட்டு நீங்கி தவம் செய்யச் சென்றபோது இறைவனின் அனுமதி இல்லாமல் ஆடி என்னும் ஓர் அசுரனை அவர் சன்னிதானத்திற்கு அனுப்பியதால் பூமியில் சிலாதரின் மகனாக பதினாறு ஆண்டுக்காலம் வாழ வேண்டும் என்னும் சாபம் பெற்று பூமியில் அவதரித்தார்.
இவர் ஆயுள் பதினாறு ஆண்டுகள்தான் என்பதை அறிந்துகொண்டு சிவபெருமானை நோக்கி மும்முறை தவம் செய்யலானார்.
முதல் முறை சிவபிரானின் திருவடியில் நீங்காத அன்பு கொள்ள வேண்டும் என்றும், இரண்டாவது முறையாக சிவநிந்தை, சிவனடியார் நிந்தை, விபூதி, ருத்ராக்ஷ நிந்தை செய்பவரை தண்டிப்பதற்கான ஆணையும், மூன்றாவது முறை சிவபெருமானை போல் நித்தியராய் எல்லோராலும் துதிக்கப் பெறுதலும், சிவசாரூப்யமும், பட்டாபிஷேகமும், கணாதிபத்யமும், சிவஞான சாரியத்வமும் பெற்றார்.
முடிவில் சிவபெருமான் அவர் சிரசில் கை வைத்து அவருக்கு அழியாத நித்திய தேகத்தையும், தீக்ஷையும் தந்தார். இதனால் விரசர் சாரூப்யம் அடைந்து திருநந்தி தேவர் என்னும் அபிஷேகம் பெயரையடைந்து, சுயசை என்னும் கன்னிகையை மணம் புரிந்து கொண்டு சிவாலயங்களில் அதிகாரியாக இருத்தப் பெற்றார். பிரதோஷ காலத்தில் சிவபெருமானுடன் நந்தி தேவர்க்கும் சிறப்பான வழிபாடு நடைபெறும். இவர் சிவனுக்கு மிகவும் பிரியம் உடையவர் ஆதலால், இவருக்கும் சிவனுக்கும் குறுக்கே போகக்கூடாது. அதுவும் பிரதோஷ காலத்தில் கண்டிப்பாகச் செல்லக் கூடாது.
No comments:
Post a Comment