Monday, July 14, 2008

மாமல்லபுரம் - பகுதி 4

ஐந்து இரதம் இயற்கையான பாறையைச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர் போல காட்சியளிப்பதால் அவை இரதம் எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 - 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தையுடைய தர்மராஜ இரதம், சாலை சிகரத்தையுடைய பீம இரதம், சதுரமான சிகரத்தையுடைய திரௌபதி இரதம் மற்றும் கெஜபிருஷ்டம் சிகரத்தையுடைய நகுல-சகாதேவ் இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காக தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம். தர்மராஜ இரதத்தில் காணப்படும் அழகு வாய்ந்த சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும் மேலும் பல்லவ-கிரகந்த எழுத்துக்கள் பொறிப்புடைய முதலாம் நரசிம்மவர்மனின் விருது பெயர்களும் அந்த இரதத்தில் காணப்படுகின்றன.

No comments: