Monday, July 14, 2008

ஏலகிரி

மலைகளின் ராணி ஊட்டி' "மலைகளின் இளவரசி கொடைக்கானல்' மற்றும் ஏற்காடு ஆகிய மலைவாசஸ்தலங்கள்தான் இதுவரை சுற்றுலாப்பயணிகள் சென்று வரும் பிரபல இடங்களாக இருந்து வந்துள்ளன. . சென்னைக்கு மிக அருகிலேயே எல்லா காலமும் நல்ல குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உள்ள ஒரு எழில்மிகு மலைப்பகுதி இருப்பதை நமது தமிழக சுற்றுலாத்துறை கண்டறிந்து அதை மேம்படுத்தி வருகிறது.
ஏழைகளின் ஊட்டி ஏலகிரி என்று அந்தப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த மலைப்பகுதியை "எல்லோரையும் ஈர்க்கும் எழில்மிகு ஏலகிரியாக' மாற்றி வருகிறார்கள். மத்திய மாநில நிதி உதவியுடன் தமிழக சுற்றுலாத் துறையும், வேலூர் மாவட்ட நிர்வாகமும், இந்த ஏலகிரியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டப்பணிகளை பார்வையிட இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலைக்கு பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டநூம். தமிழக சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் சென்னையிலிருந்து கடந்த 7ந் தேதி வௌ஢ளிக்கிழமை காலை புறப்பட்ட இந்தப்பயணம் 8ந் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது.
இந்த இரண்டு நாள் பயணமும் ஒரு இன்பச் சுற்றுலாவாகவே அமைந்தது. செய்தி சேகரிப்பதற்கான பயணம் தான் என்றாலும், அது மிகப்பெரும் சுகானுபவமாகவே அமைந்தது.
7ந் தேதி காலை சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்பு, இயக்குனர் ராஜாராம் ஆகியோர், தமிழக சுற்றுலாத்துறையின் சிறப்புக்கள், அதன் வேகமான செயல் பாடுகள், குறிப்பாக மேம்படுத்தப்படும் ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் பணிகள் அதன் சிறப்பியல்புகளை பத்திரிகையாளர்களுக்கு விளக்கிச் சொல்லி வழியனுப்பி வைத்தனர்.பல்வேறு பத்திரிகை நண்பர்களுடன் சுற்றுலாத் துறை மக்கள் தொடர்பு அலுவலர் ரவி, உதவி அலுவலர் சம்பத் ஆகியோர் வழிகாட்டுதலுடன் புறப்பட்ட இந்தப் பயணத்தில் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோயில் தரிசனம் ஒரு சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணி பீடத்தின் மேலாளர் சம்பத் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று ஸ்ரீ லட்சுமி நாராயணி அம்மனின் சிறப்புத் தரிசனத்துக்கு வழிவகுத்தார். தகதகக்கும் தங்கக் கோயிலில் அருள் வடிவமாகக் காட்சியளிக்கும் அம்மன் தரிசனம் முடிந்து, மாலையில் ஏலகிரி மலையை நெருங்கும் போது ஜிலுஜிலுவென சாரல். மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருந்த அந்தச்சூழலோடு, ஏலகிரி சென்றடைந்த பத்திரிகையாளர்களை, வேலூர் மாவட்ட கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அவருடைய உதவியாளர் ஜம்புலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.காந்தி, சுற்றுலா அலுவலர் பாலச்சந்திரன், ஜோலார் பேட்டை ஒன்றியத்தலைவர் கிருபாகரன், ஏலகிரி ஊராட்சித் தலைவர் கோவிந்தசாமி, நெடுஞ்சாலைத்துறை சரவணன் உள்ளிட்ட அதிகாரிகளும், அரசுத் துறை அலுவலர்களும் அன்புடன் வரவேற்று அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று ஏலகிரியின் மேம்பாட்டுப் பணிகளை விளக்கிக் கூறினார்கள்.படகு குழாம், பார்க், செயற்கை நீரூற்று என்று சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் அங்கு நிறைந்துள்ளதைக் கண்டநூம்.
நிலாவூர் பகுதியில் அருமையான பார்க்குடன், புதிய படகுக்குழாம் உருவாகி வருகிறது. ஏற்கனவே புங்கனூர் என்ற இடத்தில் படகு குழாமும், சிறுவர்கள், பெரியவர்கள் விளையாடி மகிழ வண்ணப் பூங்காவும் உள்ளது. அதன் அருகே இயற்கை எழிலைக்காண பரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையின் எழிலைக்காணலாம். ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, வேலவன் கோயில் மலையேறும் பாதைகள் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் ஏலகிரி மலைப்பகுதியில் இருப்பதைக் காண முடிந்தது. இதுதவிர, ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவுக்காக ஒருமிகப்பெரிய திடலுடன் கூடிய அருமையான பூங்கா, சிறுவர்களுக்கு விளையாடும் பல்வேறு வசதிகளுடன் உருவாகி வருகிறது.
ஏற்கனவே சுமார் 8 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதாகவும் சுற்றுலாத் துறை அதிகாரிகளும், மாவட்டக் கலெக்டரும் தெரிவித்தனர்.சென்னையிலிருந்து சுமார் 5 மணி நேரத்தில் சென்றடையும் இந்த ஏலகிரி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1410 மீட்டர் உயரத்தில் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, தரைப்பகுதியிலிருந்து சுமார் 25 நிமிடத்தில் உச்சிக்கு சென்றடைந்தால், அத்தனூர், முத்தனூர், புங்கனூர், நிலாவூர், மங்களம், தாயலூர் என 14 கிராமங்கள் அடங்கிய ஏலகிரி மலைப்பகுதி நம்மை எழில் கொஞ்சும் இயற்கை அழகுடன் வரவேற்கும்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு, மத்திய, மாநில நிதியுதவியுடன் கட்டப்பட்ட "யாத்ரி நிவாஸ்' என்னும் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியையும், மற்றும் இங்குள்ள பார்க், படகுக்குழாம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை இங்குள்ள மலைஇனத்து மக்களே நிர்வகிப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
"ஏலகிரி மலை மேம்பாட்டு ஆணையம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு சங்கம்' என்ற சொசைட்டி உருவாக்கப்பட்டு அதிலுள்ள சுய உதவிக்குழுப் பெண்களும், இளைஞர்களும் இந்த நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். "யாத்ரி நிவாஸ்' பணியாளர்கள் அனைவரும் விருந்தோம்பலின் சிறப்பறிந்து சுற்றுலா பயணிகளை அன்புடன் வரவேற்று உபசரிக்கின்றனர். இது தவிர ஏராளமான தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன.
ஏலகிரி மலைப்பகுதியின் இறுதியில் உள்ள ஜலகம்பாரை நீர்வீழ்ச்சியும், அதன் அருகே லிங்க வடிவில் அமைந்த வெற்றிவேல் முருகன் ஆலயமும் கூட எங்களின் பயணத்தில் அமைந்திருந்தது. சனிக்கிழமை மாலை அதையும் கண்டு ரசித்து நள்ளிரவு சென்னை திரும்பினோம். இந்த இரண்டு நாள் இன்பச் சுற்றுலாவை கண்டு ரசிக்க இனி ஏராளமான பொது மக்கள் அங்கு சென்று வருவார்கள். அவர்களை அழைத்துச் சென்று வர தமிழக சுற்றுலாத்துறையும் ஏற்பாடு செய்து தருகிறோம். மிகக்குறைந்த செலவில், விடுமுறை நாட்களை மலைப் பிரதேசங்களில் கழிக்க விரும்பும் ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த ஏலகிரி மலை ஒரு வரப்பிரசாதமாகும்.

No comments: