Monday, July 14, 2008

கொடைக்கானல்

மதுரை மாவட்டத்தில் பழநி மலைத் தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், இந்தியாவின் தென் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோடை சுற்றுலாத் தலமாகும்.
கோக்கர்ஸ் வாக் எனும் மலைப்பாதையில் (7,300 அடி உயரம்) நடந்துகொண்டே மலைச் சிகரங்களையும், அவைகளையும் தாண்டி வைகை அணை, பெரியகுளம், தேனி நகரங்களைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
கோடைக் காலங்களில் பகலிலேயே 20 சென்டிகிரேட் வெப்பம் மட்டுமே நிலவும் கொடைக்கானலில் ஏரியும், சுற்றுலாப் பயணிகளின் உற்சாகப் பயணத்திற்கு படகுச் சேவையும் உள்ளன.
இங்குள்ள பிரியன்ஸ் பூங்கா மிக அழகானது. செட்டியார் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோயில், தூண் பாறைகள் ஆகியன மற்ற அருமையான இடங்களாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சற்றேறக்குறைய 6,500 முதல் 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மிக அழகான கோடை தங்கு தலம்.
சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மிகவும் அறிந்த அழகிய நிலமகள். ஆனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளால் கோடைக்காலங்களில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கொடைக்கானல்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அளவிற்கு வசதிகள் அதிகரிக்கப்படாத நிலை. ஆயினும் கோகஸ் வாக் (7,300 அடி), பிரையன்ஸ் பூங்கா, செட்டியார் பூங்கா, தூண் பாறைகள், அழகிய கொடைக்கானல் ஏரி என்று கண்ணிற்கு குளுமையான பசுமை மாறா இடங்கள் மனதிற்கு மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியது.
இவ்வளவுதானா கொடைக்கானல்? என்று அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு எண்ணம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. கொடைக்கானலைத் தாண்டி ஒரே ஒரு இடத்திற்கு சில சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். அது பேரிஜம் எனும் அழகிய ஏரிப்பகுதி!
ஆனால், கொடைக்கானலைத் தாண்டி ஒரு நாள் முழுவதும் இயற்கை எழிலை அனுபவிப்பதற்கு அழகான அற்புதமான இடங்கள் உள்ளன. வத்தலகுண்டுவில் இருந்து ஏறி கொடைக்கானலுடன் நின்று விடாதீர்கள். அதற்கும் அப்பால் 30 கி.மீ. தூரத்தில் உள்ள கவுஞ்சி நோக்கிச் செல்லுங்கள்.
பூம்பாறை கிராமம்!
கொடைக்கானலில் இருந்து கவுஞ்சிக்குச் செல்லும்போது முதலில் நம் மனதை வசிகரிப்பது பூம்பாறை கிராமம்தான். சுற்றிலும் மலைகள், நடுவில் கிராமம். சில நூறு வீடுகள், வீடுகளைச் சுற்றி மலைச்சரிவுகளில் அவர்களின் விவசாய நிலங்கள். சாலையில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு.
சாலையின் இரு மங்கிலும் ஆங்காங்கு நாவில் நீர் சுரக்க வைக்கும் செர்ரி பழ மரங்கள். பச்சையாகவே இருக்கும். ஆனால் ஒரு கடி கடித்துப் பார்த்தால் காயிலும் இவ்வளவு சுவையா என்று எண்ணத் தோன்றும். அங்கிருந்து வட்டமடித்துக் கொண்டு செல்லும் பாதையின் இரு மங்கிலும் அடர்ந்த வனப்பகுதி. நிதானமாக உங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லுங்கள். மரங்களுக்கு இடையே உற்று நோக்குங்கள். காட்டு எருமைகளைக் (பைசன்) காணலாம். அவைகளை அமைதியாகப் பார்க்க வேண்டும். அவைகள் மிரண்டுவிட்டால் நமது கதை கந்தலாகிவிடும். ஜாக்கிரதை. மன்னவனூர் செம்மறி ஆடு ஆய்வுப் பண்ணை!
அற்புதமான மலைப்பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆய்வுப் பண்ணை. அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். இங்கு பாரத் மெரினோ எனும் செம்மறி ஆட்டு இனம் நன்கு வளர்க்கப்பட்டு அதன் ரோமங்கள் எந்த அளவிற்கு பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு லாபம் தருகிறது என்று கூறிக் கொண்டிருக்கிறது.
ஆடுகள் மட்டுமல்ல ரஷ்யாவின் சில்சிலா மற்றும் ஜெர்மனியின் முசு முசு முயல் வகைகளை இனப்பெருக்கம் செய்தும் ஆய்வு செய்து வருகின்றனர். சுற்றுலாவுடன் சற்று வணிக ரீதியாக புத்தியையும் தேற்றிக் கொள்ளலாம்.
கேரள எல்லையில் உள்ள கவுஞ்சி!
இயற்கை எழிலுடன் சற்றும் கரைபடாமல் சிதையாமல் அப்படியே உள்ள எழில் கொஞ்சும் மலைக் கிராமம் கவுஞ்சி. வெள்ளை பூண்டு முதல் ரோஜாப்பூக்கள் வரை மலைச்சரிவுகளில் படிப்படியாக வெட்டப்பட்ட வேளாண் நிலங்களில் பயிரிடுகின்றனர். நடந்து சென்றே அனுபவிக்கலாம். சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு காலையில் புறப்பட்டால் மாலை வரை கண்ணாரக் காணும் காட்சிகள் ஏராளம் உண்டு இந்தப் பாதையில். இதற்கு மேல் கொடைக்கானல் சென்றால் கவுஞ்சியை உங்களது எல்லையாகக் கொள்ளுங்கள்.

No comments: