Monday, July 14, 2008

தஞ்சாவூர் - பகுதி 3

சோழர்களின் தலைநகரமாய் விளங்கிய தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பிரஹதீஸ்வரர் கோயில் அமைந்த நகரம் தஞ்சை. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நந்தி இந்தக் கோவிலில்தான் உள்ளது. தஞ்சை சரசுவதிமகால் நூலகம் உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது. கி.பி. 1400களில் இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.
சித்தன்னவாசல், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலே உள்ள குகை ஓவியத்திற்குப் புகழ் மிக்க ஊர். இவ்வூரில் உள்ள கி.பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.
நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச் சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். இது தஞ்சை மாவட்டக் கடலோரத்தில் உள்ள பேராவூரணி அருகில் உள்ளது.
திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாக திருச்சிராப்பள்ளியை, திருச்சி என்று அழைப்பார்கள். திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது மலைக்கோட்டையாகும். காவிரியின் தென்கரையில் இது கம்பீரமாக அமைந்துள்ளது. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் இது மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோவிலும், மேலே உச்சிப்பிள்ளையார் கோவிலும், இடையே தாயுமானவர் கோவிலும் உள்ளன.

No comments: