Monday, July 14, 2008

திருமால் திருக்கோவில் வழிபாட்டு மரபுகள்

பக்தியின் மொழி தமிழ் என்று போற்றப்படுகின்றது. தமிழ்நாட்டில் தோன்றிய பக்தி இயக்கம் இந்தியா முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வைணவப் பக்தி இயக்கம் வட இந்தியாவில் சமூக, சமய வழிபாட்டு நெறிகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடல்லாமல், அவ்வவ் வட்டார மொழிகளின் மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உதவியது. தமிழ்ப் பக்திப் பேராற்றில் இணைகளில் ஒன்றாகிய வைணவத்தின் எழுச்சியில் பொங்கியெழுந்த ஆழ்வார்களின் அருளிச்செயல் வெள்ளம், தமிழ்நாட்டுத் திருமால் திருக்கோவில் வழிபாட்டு மரபுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இக்கட்டுரை ஆராய முயல்கின்றது.
'ஆழ்வார்' என்ற சொல் வைணவ மரபுகளில் 'பக்தியில் ஆழங்கால்பட்டவர்' என்று பொருள் கொள்ளப்படுகின்றது. ஆனால், கல்வெட்டுகளில் ஆளும்வர்க்கத்தினர் ஆள்வார்/ஆழ்வார் என்று பொறிக்கப்பட்டுள்ளனர். 'நாயன்மார்' என்னும் சொல் 'தலைவர்கள்' என்னும் பொருளைத் தருவது போன்றே, 'ஆழ்வார்' என்னும் சொல்லையும் பக்தியால் மக்களை ஆளுகை செய்தவர்/தலைவர் என்று பொருள் கொள்வதே வரலாற்று நியதிக்கு ஒத்ததாகும்.
ஆழ்வார்களுள் உயர் சாதியிரான பிராமணர் முதல் இழிகுலத்தோர் என ஒதுக்கப்பட்ட பாண் சாதியினர் ஈறாகப் பலரும் அடங்குவர். எனினும், இவ்வியக்கத்தை முன்னின்று நடத்திய நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் வருண அமைப்பில் நான்காம் படியில் இருந்த சூத்திரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஒப்பிடும்போது, சைவ பக்தி இயக்கத்தை முன்னின்று நடத்திய சைவ சமய குரவர் நால்வரில் மூவர் பிராமணர் என்பது இங்கே ஒப்பு நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
திருக்கோயில்களில் இறைவன் முன்னர் நாயன்மார்கள், ஆழ்வார்களின் தமிழ்ப் பாக்களை விண்ணப்பிக்கும் வழிபாட்டு மரபு பல்லவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. இம்மரபு கோவில்களில் பூசனை நெறிகளுள் இன்றியமையாத ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் உருவாக்கம் பெற்ற சோழப் பேரரசு, இப்பாடல்களைத் தேடி மீள்கண்டுபிடிப்புச் செய்து, தொகுத்தும் வகுத்தும் அவற்றுக்கொரு தத்துவப் பின்னணியைக் கொடுக்க வேண்டிய சூழலை எதிர்கொண்டது. நம்பியாண்டார் நம்பி சோழப் பேரரசின் துணைகொண்டு தேவாரத் திருமுறைகளைத் தொகுத்து, அவற்றின் பண்புகளையும் மீட்டுருவாக்கம் செய்தார். நாதமுனி ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அரசின் துணையின்றித் தாமாகவே நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் தொகுத்து வௌதப்படுத்தினார்.
நாதமுனியின் தொகுப்பு திருமால் திருக்கோவில் வழிபாட்டு நெறிகளில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வழிபாடும் சமயமும் தத்துவமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கவொண்ணாதபடி வைணவ ஆசாரியர்களின் வாழ்க்கையை அது உருவாக்கியது. தமிழ் மொழியில் இயற்றப்பட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், தேவபாடை எனப் போற்றப்பட்ட வடமொழி வேதங்களுக்கு ஒப்பானவை என்னும் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. அதுவரை, எந்த ஒரு தேசிய மொழியும் கோவில் மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதனை நாம் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாதமுனிக்குப் பின்னர் வந்த ஆசாரிய பரம்பரையினர் இக்கருத்தாக்கத்தின் தளத்தை மேலும் விரிவுபடுத்தினர். ஆழ்வார்களின் அருளிச் செயல்களும் வேதங்களைப் போன்றே இறைவனால் அருளப்பட்டவை; அநாதியானவை; வேதங்களின் உட்பொருளையே விளக்குபவை என அவர்கள் விளக்கவுரை எழுதினர். இராமாநுஜர் தம்முடைய விசிட்டாத்துவிதத் தத்துவத்தைச் சங்கரருக்கு மறுப்பாக வடமொழியில் எழுதிய போது, ஆழ்வார்களின் பாசுரங்களே வேத உபநிடத வாக்கியங்களைத் தௌதவாகப் புரிந்து கொள்ள அவருக்கு உதவின என்பர். வேதாந்த தேசிகரும் இக்கருத்தைச் ''செய்ய தமிழ் மாலைகள் நாம் தௌதய ஓதி, தெரியாத மறை நிலங்கள் தௌதகின்றோமே'' என்று குறிப்பிடுகின்றார். ஆழ்வார்களின் அருளிச் செய்லகள் திராவிட வேதம் எனப்பட்டது. உபய வேதாந்தம் என்னும் கோட்பாடு வைணவர் மத்தியில் உருவாயிற்று.
பாஞ்சராத்திர ஆகமத்தைப் பின்பற்றிய நாதமுனி தொடக்கமான வைணவ ஆசாரியர்கள், திருவரங்கக் கோவிலிலும் மற்றைய திருமால் திருக்கோவில்களிலும் வழிபாட்டு நெறிகளைச் சீர்திருத்தி அமைத்தபோது, ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முதன்மை நல்கினர். அவை கோவில் கருவறைக்குள் விண்ணப்பிக்கப்பட்டன. நாள் வழிபாட்டில் இறைவனைத் துயிலெழுப்பி நீராடச் செய்து பூச்சட்டி திருவமுது செய்யவைத்தல் போன்ற பாவனச் சடங்குகளில் திருப்பள்ளியெழுச்சி, நீராட்டம், பூச்சுடல் போன்ற திவ்யப் பிரபந்தப் பாடல்களைப் பாடி, ஓதினர். திருமால் திருக்கோவில்களில் வேத அத்யயனம் போன்றே தமிழ்ப் பாசுரங்களும் திருவத்யயனம் என்னும் பெயரால் ஒழுங்கு படுத்தப்பட்டது.
திருவாய்மொழி திருவரங்கம் பெரிய கோவிலில் திருமங்கையாழ்வார் காலம் முதலே (கி.பி.9 ஆம் நூற்றாண்டு) இறைவன் திருமுன்னர் விண்ணப்பம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நாதமுனி இவ்வேற்பாட்டை மேலும் செம்மைப்படுத்தி, வைகுந்த ஏகாதசியை ஒட்டி, ஆழ்வார்களின் பாசுரங்கள் நாலாயிரத்தையும் திருமால் திருக்கோவில்களில் விண்ணப்பிக்கும்படி செய்தார். இது உண்மையில் ஒரு தமிழ்த் திருவிழா என்பதில் ஐயமில்லை. மேலும், அவர் ஆழ்வார்களின் பாசுரங்களின் உட்பொருளை அரையர் சேவை மூலமாக நாடகமாக நடிக்கவும் எற்பாடு செய்தார். திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்திக்கு முன்னர் ஆழ்வார்கள் பாசுரங்களை ஒதிச் செல்லுதல் வைணவ மரபுகளுள் ஒன்று. சைவ மரபுகளுள் திருப்பதிகங்கள் இறைவன் பின்னால் ஓதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: