Monday, July 14, 2008

குன்றக்குடி

தமிழகத்தின் தெற்கே காரைக்குடி திருப்பத்தூர் இடையில் அமைந்துள்ளது குன்றக்குடி. இவ்வூரின் நடுவில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். காரைக்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. குன்றக்குடி ஊரின் நடுவில் உள்ளது குன்றத்துக் கோயில். நின்ற மயிலின் வடிவத்தில் குன்று அமைந்திருப்பதால் மயூரகிரி என்றும் அக்காலத்தில் இவ்வூர் பெயர் பெற்றிருந்தது.
தலப்புராணம்:
ஒரு காலத்தில் பிரம்ம தேவனின் அன்னப் பறவையும் திருமாலின் கருடனும் முருகப் பெருமானைக் காணச் சென்றனர். அப்போது மயில் அவர்களை அவமதிக்க, கோபம் கொண்ட முருகப்பெருமான் மயிலைக் குன்றாக மாறும்படி சபித்தார்.
தன் தவறை உணர்ந்த மயில், தன் சாபம் நீங்க வேண்டுமென்று முருகனை வேண்டி நிற்க, முருகப்பெருமான் மயிலின் வேண்டுகோளுக்கிணங்கி அக்குன்றின் மீது வீற்றிருப்பதாக சொன்னார். எனவே மயில் குன்றுருவாக அமைந்த தலமானது குன்றக்குடி. குன்றக்குடி என்றவுடன் நினைவில் வருவது காவடி எடுத்தல். இங்குக் காவடி எடுத்தலை நேர்த்திக் கடனாகக் கருதுகின்றனர். இத்தலத்தில் பல தேவர்களும், பாண்டவர்களும் வந்து முருகனை வழிப்பட்டு பேறு பெற்றதாக சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு:
குன்றில் அடிவாரத்தில் ஒரு கோயிலும் உச்சியில் ஒரு கோயிலும் என்று கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குன்றின் அடிவாரத்தில் தென்மேற்குப் பகுதியில் சரவணப் பொய்கையுள்ளது. குன்றின் உச்சிக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் உள்ளது தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. பக்தர்கள் முதலில் இவரை வழிபட்டு பின்னரே மேலேறிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். கீழே உள்ள கோயில் குடைவரையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயிலின் சிறப்பம்சங்கள்:
இங்கு அகத்தியர் வழிபட்ட தேனூற்று நாதருக்கும் அழகம்மைக்கும் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. மேலும் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட சிவலிங்கங்கள், சிவன், விஷ்ணு, துபாரபாலகர்கள், பிரம்மா, நடன நிலையில் சிவன் எனப் பல சிற்பங்கள் அமைந்துள்ளன. அதுபோல் குன்றின் மீதேறிச் செல்லும் வழிகளில் எல்லாம் பக்தர்கள் இளைப்பாறும் விதத்தில பல மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. வழியில் விநாயகர் மற்றும் இடும்பன் கோயில்களையும் காணலாம்.
மலைக்கோயிலின் முகப்பில் இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு. வீரவாகுத் தேவர் அடுத்து நால்வர் சன்னதிகள் உள்ளன. உச்சிக் கோயில் சிறிய மண்டபங்களுடனும் ஒரே திருச்சுற்றுடனும் விளங்குகிறது. மகாமண்டபத்தின் இடப்பக்கம் கணபதி காசிவிஸ்வநாதர் விசாலாட்சி சன்னதிகள் உள்ளன.
அலங்கார மண்டபத்தில் மருது சகோதரர்களின் உருவச் சிலைகள் உள்ளன. ஆறுமுகப் பெருமாளின் உற்சவர் சன்னதியும் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மயில் மண்டபம் அமைந்துள்ளது. மயில் உருவும் கொடி மரமும் உள்ளன. கர்ப்ப கிரகத்தில் சுப்பிரமணியம் சுவாமி பன்னிரு கரங்களுடன் மயில் மீதமர்ந்து இருபுறங்களிலும் தேவியர் சூழ கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். திருச்சுற்றில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, நால்வர், குழந்தை வேலன், நடராசர், பைரவர் சன்னதிகளும் கொடிமரத்தின் வடகீழ்ப்புறம் நவக்கிரக மேடையும் அமைந்துள்ளன.
இங்குள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் மேற்கு நோக்கி நின்றுள்ளது சிறப்பு. மேலும் மலையிலிருந்து கீழிறங்டிக வந்த உடன் வலப்புறம் ஒரு தனிச்சிற்றாலயத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணினும், பழனி ஞானதண்டாயுத பாணி சுவாமியும் காட்சி தருகின்றனர்.
கந்தர் சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது -த்திருத்தலத்தில்.
கோயிலின் ஆதிகாலத்திய வரலாறு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் மருது பாண்டியருக்கு அவரது உடலில் தோன்றிய கடடியை, நாட்டுக் கோட்டைச் செட்டியார் ஒருவர் முருகன் திருநீறு அளித்துக் குணப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மருது பாண்டியர்கள் இத்திருக்கோயிலில் மதில், மண்டபங்கள் முதலியானவற்றைக் கட்டி திருப்பணித் தொண்டு செய்தனர் என்று சொல்லப்படுகிறது. அருணகிரிநாதர் குன்றக்குடி முருகனைப் போற்றி திருப்புகழ்ப் பாடல்கள் பாடியுள்ளது சிறப்பு அம்சம் ஆகும்.
விழா காலங்களில் பக்தர்கள் முருகனுக்கு நேர்ந்து காவடி எடுப்பது வழக்கம்.

No comments: