Monday, July 14, 2008

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொக்கிஷங்களில் சிலவற்றைப் பார்த்துவிட்டு மதுரை திரும்பினோம். புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டின் அருங்காட்சியகம் என்கிறார் பேராசிரியர் சுவாமிநாதன். தமிழ்நாட்டின் கட்டிடக் கலை, இசை, தமிழ், சிற்பம் போன்ற அரிய கலைகளில் தமிழ்நாட்டின் மூதாதையர்கள் நிகழ்த்திய தொன்மையான சாதனைகளின், பாரம்பரியச் சிறப்புக்களின் காட்சிக்கூடம் புதுக்கோட்டை மாவட்டம். தமிழ்நாட்டின் சுற்றுலா வரைபடத்தில் தவறவிடக் கூடாத முக்கியமான மாவட்டம். புதுக்கோட்ட மாவட்டப் பாரம்பரியச் சின்னங்களைக் கண்டுகளித்த பின்பு எண்ணற்ற ஏக்கங்களுடனும், அழிந்து வரும் தொன்மைகள் குறித்த, சரியாகப் பராமரிக்கப்படாத செல்வங்கள் குறித்த, உரிய விளம்பரம் அளிக்காத அலட்சியம் குறித்த வருத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், அற்புதமான நமது பாரம்பரியச் செல்வங்களைக் கண்ட திருப்தியுடன் நடுஇரவில் மதுரை வந்து சேர்ந்தோம். திரு.ஞானசம்பந்தம் அவர்கள் புண்ணியத்தில் வாழ்க்கையில் தவறவிடக் கூடாத பல அற்புதங்களைக் காணும் வாய்ப்பு இந்த முறை இந்தியப் பயணத்தில் கிட்டியதை நன்றியுடன் நினைவுகூறுகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிய இடங்களைப் பற்றிய விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம். பேராசிரியர் என்னைச் சோழ பல்லவர் காலத்துக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாது, இரண்டு சிறுகதைத் தொகுப்ப்புகளையும் தன் அன்பளிப்பாக அளித்து வழியனுப்பி வைத்தார்.
மறுநாள் மனைவியும், பெண்ணும் ஊரில் இருந்து கிளம்பி மதுரையில் என்னுடன் சேர்ந்து கொள்ள, ஊருக்குக் கிளம்ப இரண்டு நாள்களே உள்ள பரபரப்பு தொற்றிக்கொண்டது. செல்வதற்கு திட்டமிட்டிருந்த தேக்கடி, அழகர் மலை, திருச்சி, கோவை, போன்ற ஊர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட, இறுதியில் மதுரை மஹாலும், கோவிலும் மட்டுமே அவசரகதியில் பார்க்க இயன்றது. என் பெண்ணிடம் மதுரையை ஆண்ட ராஜாவின் பாலஸுக்குப் போகலாம் என்று சொல்லி வைத்திருந்தேன். அவளும் பாலஸ் என்றால் என்னமோ ஏதோ என்று, தனது டிஸ்னிப் பட நினைவுகளுடன் ஒரு பெரிய கனவு வைத்திருந்தாளாகையால் ஆர்வத்துடன் பாலஸ் பார்க்கக் கிளம்பி விட்டாள். மதியம் ஒரு மூன்று மணி அளவில், நகரின் மையத்தில் பெரிய மதில் சுவருடனும் பெரிய கதவுகளுடனும் கூடிய திருமலை நாயக்கர் மஹால் என்று அழைக்கப் படும் அரண்மனையின் முன்பாக ஆஜராகி விட்டநூம். இன்றைக்கும் மதுரைவாசிகள் பெரும்பான்மையானவர்கள் உள்ளே சென்று பார்த்திராத, பார்க்க ஆர்வம் இல்லாத, 17ம் நூற்றாண்டு வரலாற்றுச் சின்னம். நாயக்க வம்சத்தின் பெருமை சொல்லும் பிரமிப்பு.
ஒரு 6 வயது இருக்கும் பொழுது என் அப்பா அழைத்துச் சென்றது திருமலை நாயக்கர் மஹால். உள்ளே அரசாங்க வாடையுடன் பல சின்னக் கோர்ட்டுகளுக்கும், வக்கீல்களுக்கும், குமாஸ்தாக்களுக்கும், ஃபைல் கட்டுக்களுக்கும், தூசியுடன் கூடிய நாற்காலிகளும், புழுக்கை வாசனையுடன் கூடிய மரப் பீரோக்களும், டவாலிகளும், வெற்றிலைச் சாறினால் பெயிண்ட் அடிக்கப்பட்ட சுவர் மூலைகளும், காரை பெயர்ந்திருந்து இன்றைக்கே விழுந்து விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த தூண்களும், சுவர்களும், கசகசவெனக் கூட்டமும் சத்தமுமாக இருந்த அந்த உயர்ந்த கட்டிடத்தின் நடுவே பெரிய பெரிய தூண்களைக் கண்டது மாத்திரம் சோகையாக நினைவில் நின்று போனது. ஒரு இருண்ட தாசில்தார் ஆஃபீசின் புழுக்கை வாசனையுடன் நான் கண்ட அந்த இடத்தை, ஏனோ என்னால் ஒரு ராஜா வாழ்ந்த அரண்மனையாக மட்டும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அன்று பார்த்த அந்த மஹால் நினைவால் அதன் பின் மதுரையை விட்டு வௌதயேறும் வரை ஏனோ அங்கு உள்ளே போய் பார்க்க வேண்டும் என்று மட்டும் தோன்றியதேயில்லை. ஆயிரம் முறை அந்த அரண்மனையைக் கடந்து சென்றிருப்பேன், ஒரு முறையாவது அதை லட்சியப்படுத்தி ஏறெடுத்துப் பார்த்தது கூடக் கிடையாது. பிறந்ததில் இருந்து அதன் பக்கத்துத் தெருவில் இருக்கும் என் நண்பன் இன்று வரை உள்ளே சென்று பார்த்திலன் இல்லை. பின்னால் அரண்மனையை அரசாங்கம் மீட்டெடுத்து அலுவலகங்களையெல்லாம் அப்புறப்படுத்தி, தூசி தட்டி, மெருகேற்றி, மராமத்து செய்து நல்ல நிலைக்குக் கொண்டு வந்ததாகச் சொன்னார்கள். மணிரத்தினம் கூடப் போய் கண்ணாளனே என்று பம்பாய்க்குப் பாட்டெல்லாம் எடுத்தார். யார் வீட்டில் இத்தாம் பெரிய தூண்கள் வைத்திருக்கிறார்கள் என்று படம் பார்த்த யாருக்கும் கேள்வி கேட்கத் தோன்றவில்லை போலும். இரண்டு கைகளாள் கட்டி அணைத்தாலும் அணைக்க முடியாத தூண்கள் நிறைந்த அரண்மனை. இத்துனை வருடங்கள் கழித்து அந்த அரண்மனைக்குள் செல்ல நேர்ந்தது ரசிக்கத்தக்க அனுபவமாகவே இருந்தது. என்னுடன் சேர்ந்து நீங்களும் ஒரு முறை அரண்மனையைச் சுற்றிப் பார்த்து விடலாம். நீங்கள் 5 ரூபாய் டிக்கட் வாங்க வேண்டாம். எல்லம் என் செலவு.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கிழக்கே ஒரு 1 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த 366 வருட அரண்மனையின் மிச்சம். திருமலை நாயக்கர் மஹால் என்று இன்று அழைக்கப்படுகிறது. ஒரிஜினல் அரண்மனையில் நான்கில் ஒரு பகுதி மட்டும் இன்றும் மீதமிருக்கிறது. மஹாலின் வாசலில் ஒருபுறம் மன்னர் திருமலை நாயக்கர் கரிய நிறத்தில் நின்று கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் இந்த மஹாலை புனருத்தாரணம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தமிழ் நாடு அரசின் தொல் பொருள் துறை உள்ளது. இதுவரை நாம் பார்த்த ப்ளூ கலர் எனாமல் பெயிண்ட் கேஸ்கள் எல்லாம் மத்திய அரசின் தொல்பொருள் துறை; இது மாநில அரசு; அரண்மனையை விடப் புரதானமாய் இருக்கிறது அரசு அலுவலகம். உள்ளே நுழைய தலைக்கு 5 ரூபாய் டிக்கட் வாங்குகிறார்கள். கேட்பவர்களுக்கு மட்டும் 5 ரூபாய்க்கு ஒரு கையேடு தருகிறார்கள். இருந்த ஒரு கைடும் ஒரு வௌ஢ளைக்கார டூரிஸ்ட் கூட்டத்திற்குச் சுற்றிக்காட்டப் போய் விட்டதால் நாங்களே சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அரண்மனைக்குள்ளே நுழைந்தோம்.
உள்ளே வேறு அலுவலர் யாரும் காணப்படவில்லை. ஓவென்று பரந்து விரிந்து கிடந்தது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கட்டிய அரண்மனை. உள்ளே நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது ஒரு அடி கைப் பம்பு. உள்ளே நுழைபவர்கள் எல்லோரும் அதை அடித்து தண்ணீரைக் குடித்துக் கை கால்கள் கழுவிக் கொள்கிறார்கள். ஒரு புராதானமான அரண்மனையின் நுழைவு வாயிலில் இப்படி ஒரு ரசனைமிக்க அமைப்பு!! அரண்மனையின் வௌதயே சின்னதாக ஓய்வறைகள் கட்டி விட்டிருக்கலாம். அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கை அடி குழாய் மட்டும் ஓயாமல் டொய்ங் டொய்ங் என்று அடிபட்டுக் கொண்டிருக்கிறது, உள்ளே வருவோர் போவோர் அனைவரும் கடமையாக கை கால் முகம் அலம்பி புத்துணர்ச்சி கொள்கின்றனர். தென்னிந்தியாவின் எழில் வாய்ந்த அரண்மனைகளில் முக்கியமான ஒன்றாகிய திருமலை நாயக்கர் அரண்மனையின் பிரதான நுழைவாயில் கொஞ்சம் ரசிக்கத் தகுந்த சிலைகள் போன்ற வேறு அமைப்பு ஏதாவது வைத்திருக்கலாம். நிச்சயம் அடி பம்பு அந்த அரண்மனைக்கு ஒவ்வாமல் நிற்கிறது. திருமலை மன்னர் நல்ல வேளை உயிருடன் இல்லை.
அடி பைப்பைத் தொடர்ந்து ஒரு பெரிய முற்றம். அதில் கொஞ்சம் பெயருக்குச் சோகையாக புல் வளர்த்து வரிசை வரிசையாக நாற்காலிகள் போட்டு வைத்திருக்கிறார்கள். இரவில் ஒலியும் ஔதயும் என்று ஒரு நிகழ்ச்சி காண்பிக்கிறார்கள். செவ்வக முற்றத்தைச் சுற்றி வானுயரத் தூண்கள். தூண்கள் முடியும் இடத்தில் அழகிய சிலைகள், எழிலார்ந்த வடிவங்கள் வடிக்கப் பட்டுள்ளன. ஒரு ஆளால் கட்டிப் பிடிக்க முடியாத சுற்றளவு உள்ள பிரமாண்டத் தூண்கள் வழுவழுவென நெடுநெடுவென உயர்ந்து நிற்கின்றன. தூண்களின் வரிசையமைப்பு எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஒத்திசைந்த அழகைத் தருகின்றன. தூண்களுக்கு உள்ளே நால்புறமும் சுத்தி வர அரண்மனை விரிகிறது. முற்றத்தில் அமையப் பட்டுள்ள வௌதத் தூண்கள் மேலே உத்தரத்தில் சேரும் இடத்தில் அழகிய பல பதுமைகள், யாளிகள், பூத கணங்கள், இன்னும் பல எழிலார்ந்த சிற்பங்கள் கண்களைக் கவருகின்றன. ஒரு சில சிற்பங்கள் இத்தாலியச் சிற்பங்களையும் ஓவியங்களையும் நினைவு கூர்கின்றன.
உள்ளே உயரமான டநூம்களின் உட்புறத்தில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களும், விதானங்களும், ஜன்னல்களும் முகலாயக் கட்டிடக் கலை அமைப்பை காட்டுகின்ற்ன. யாளிகளும், பூத கணங்களும், வளைவுகளும் பண்டைய தமிழ் நாட்டின் கட்டிடக் கலை, சிற்பக் கலையின் சிறப்புகளை கொண்டுள்ளன. உயரே அந்த அழகைக் கழுத்து வலிக்கக் கண்டு ரசித்த பின் அரண்மனையின் உள்ளே மெதுவாகச் செல்லலானோம். முற்றத்தைச் சுற்றி சில படிகள் ஏறினால் பெரிய தாழ்வாரங்கள் நீண்டு செல்கின்றன. அந்தப் பகுதிகள் முழுவதும் பெரிய தூண்கள் வரிசை வரிசையாக அலங்கரிக்கின்றன. கூரையில் அழகிய வண்ண வடிவங்கள் வடிக்கப் பட்டுள்ளன. விமானங்கள் அமைந்துள்ள கூரைகளில் உள்ள வேலைப்பாடுகளும், ஓவியங்களும் வாய் பிளக்க வைக்கின்றன. இந்தப் பகுதி சொர்க்க விலாசம் என்று அழைக்கப் படுகிறது. இது முற்றத்தைச் சுற்றி அமைந்துள்ளது. இதில் ஒரு பகுதியில் முற்றத்தைப் பார்த்து அமர்ந்து கொண்டுதான் திருமலை நாயக்கர் தன் சபையை நடத்தி வந்துள்ளார். ரத்தினத்தினால் அலங்கரிக்கப் பட்ட அரியணையில் தந்தத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப் பட்டுள்ள விதானங்களின் கீழே அமர்ந்து மன்னர் ஆட்சி செலுத்தியிருக்கிறார். அங்கையற்கன்னியின் தாசனாய் நாட்டை ஆள்வதைக் குறிக்கும் விதமாக, ஆண்டுக்கொரு முறை தன் செங்கோலை மீனாட்சி அம்மனிடம் ஆசி வாங்கி ஊர்வலமாக எடுத்து வந்து அரியணையில் செங்கோலை அமர்த்தி அதனடியில் அமர்ந்து ஆட்சி செய்திருக்கிறார். அந்தப் பெருமைக்குரிய அரியணையை பிரிட்டிஷ் மியூசியத்தில் இருந்து மீட்டு வந்து இந்த மஹாலில் வைத்திருக்கிறார்கள். ராஜாவோட சேர்ல ஏன் இத்தனை காப் வெப் இருக்கு என்று என் பெண் அங்கலாய்த்தாள். ராஜா இத்தனை வருஷமா உட்காராததால் சிலந்தி ஆட்சி செய்கிறது என்று சமாதானப் படுத்தினேன். இந்த இடத்தில் நாயக்கர் வம்சம் குறித்த கொஞ்சம் வரலாற்றைப் பார்த்து விடலாம்.
தென்னிந்தியாவைச் சூறையாடி கோவில்களையும் நகரங்களையும் கொள்ளை கொண்டு, அழித்து ஆண்டு வந்த முகலாயர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறார் கிருஷ்ண தேவராயர். அவர் தம் ஆட்சிக்குப் பின் தென்னிந்தியாவில் மீண்டும் ஹிந்து மன்னர்களின் கீழ் பெரும் மறுமலர்ச்சி ஏற்படுகிறது. விஜய நகரப் பேரரசின் கீழ் வந்துள்ள மதுரையை ஆட்சி செலுத்துவதற்காக தன் பிரதிநிதிகளை நியமிக்க, தலைக்கோட்டைப் போரின் தோல்விக்குப் பிறகு மதுரையை நாயக்க மன்னர்களே முழுக்க முழுக்க தங்கள் கைப்பற்றிக் கொண்டு தங்களது சுய ஆதிக்கத்தின் கீழ் ஆட்சி செலுத்த ஆரம்பிக்கிறார்கள். இப்படியாக 1529 முதல் 1739 வரை மதுரை நாடு நாயக்க மன்னர்களால் ஆட்சி செலுத்தப்பட்டு வந்துள்ளது. விஸ்வநாத நாயக்கர் என்பவர் தலைமையில் 1529ல் தொடங்கிய நாயக்கர் ஆட்சி மீனாட்சி என்ற பெண் நாயக்க மன்னர் ஆட்சியில் 1739ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. விஸ்வநாத நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், வீரப்ப நாயக்கர், இரண்டாம் கிருஷ்ணப்பர், முத்து வீரப்ப நாயக்கர்,முத்து கிருஷ்ணப்ப நாயக்கர், திருமலைநாயக்கர், இரண்டாம் முத்து வீரப்பர், சொக்கநாதர், மூன்றாம் முத்து வீரப்பர், ராணி மங்கம்மாள், மீனாட்சி என்று இரண்டு பெண்ணரசிகள் உட்பட 200 ஆண்டுகள் நாயக்க மன்னர்கள் மதுரை தேசத்தை ஆண்டு வந்துள்ளனர். 1739ம் ஆண்டு ஆற்காட்டு நவாப் அனுப்பிய சந்தா சாகிப் என்பவனுக்கு, மதுரையைத் தாக்காமல் திரும்பிச் செல்வதற்காக ஒரு கோடி பணம் ராணி மீனாட்சி அளித்தும் சந்தா சாகிப்பு ஏமாற்றி மதுரையைக் கைப்பற்றிக் கொள்கிறான். அரசி மீனாட்சி தற்கொலை செய்து கொள்ள நாயக்கர் வம்சம் முடிவுக்கு வருகிறது.
அதன் பின்னர் ஆற்கா நவாபும், அதன் பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் வரும்வரை மராட்டியர்களும் மதுரையை ஆண்டுள்ளனர். பாண்டிய மன்னர்கள் எல்லாம் 14ம் நூற்றாண்டுடன் காணாமல் போய்விட மதுரையை தமிழரல்லாதவர்தான் ஏறத்தாழ 600 வருடங்கள் ஆண்டு வந்திருக்கின்றனர். இதில் மதுரையை 1623 முதல் 1659 வரை ஆண்ட திருமலை நாயக்கர் என்ற மன்னன் நாயக்கர் வம்சத்திலேயே மிகவும் புகழ் பெற்ற மன்னராக செங்கோலாட்சி செலுத்தியிருக்கிறார். மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம் கோவை, புதுக்கோட்டை, திருநெல்வேலி என்று ஒரு பெரிய சாம்ராஜ்யமே இவரது ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. இவர் ஆட்சி காலத்தில்தான் மதுரையில் மீனாட்சி கோவில் திருப்பணி, முக்குறுணிப் பிள்ளையார், தெப்பக்குளம், புது மண்டபம், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், திருவானைக்கா, திருவரங்கம், திருநெல்வேலி என்று பல கோவில்களை புனருத்தாரணம் செய்து, திருப்பணிகள் செய்துள்ளார்.
அழிந்த கோவில்களைப் புனர் நிர்மாணம் செய்வது, கோவில்களுக்குச் செல்வங்கள் வழங்குவது, திருவிழாக்கள் ஏற்படுத்துவது, போர் புரிவது என்ற பல்வேறு ஜோலிகளுக்கு நடுவே ஒரு பிருமாண்டமான அரண்மனையையும் 1639ம் ஆண்டு நிர்மாணித்துள்ளார். மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் சித்திரைத் திருவிழா, வைகாசி வசந்த விழா, புரட்டாசி நவராத்ரி விழா, தையில் தெப்பத் திருவிழா என்று மக்கள் கூடவும், மகிழ்ச்சியாக கொண்டாடவும் திருவிழாக்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தியுள்ளார். அந்த வழக்கமும் திருவிழாக்களும் இன்று வரை தொடர்கின்றன. உழுது, உழைத்துக் களைத்த மக்களுக்கு, ஆண்டவன் தரிசனமும், வாண வேடிக்கைகளும், விருந்தும் படைத்து மகிழ்ச்சியாக ஆட்டம் பாட்டம் கூத்துக் கொண்டாட்டங்களுடனும் வருடத்தின் சில தருணங்களை அனுபவிக்கும் வண்ணம் திட்டமிட்டு பல்வேறு விழாக்களை சமயத்துடன் இணைத்து உருவாக்கியுள்ளார் திருமலை நாயக்கர். இவரது உருவச் சிலைகள் இவர் திருப்பணி செய்த புது மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், அழகர் கோவில் போன்ற இடங்களில் காணக் கிடைக்கின்றன. இவர் காலத்தில் மதுரையிலும் பிற ஊர்களிலும் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் மிகச் செழிப்பாக நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அரண்மணை கட்டுவது, கோவில் கட்டுவது, குளம் தோண்டுவது, வாய்க்கால் வெட்டுவது என்று ஏகத்தும் கட்டிடக் கலை, சிற்பக் கலை ஆட்களிடம் மிக சுறுசுறுப்பாக வேலை வாங்கியுள்ளார்.
புது மண்டபத்தில் இவரது அரசியை சிற்பமாக வடிவமைத்த அமைச்சர், சாமுத்ரிகா லட்சணத்தின்படி அரசியின் தொடையில் வடுவொன்று இருக்க வேண்டும் என்று அனுமானித்து அதையும் சிற்பத்தில் செதுக்கி விட, அவர் மீது சந்தேகம் கொண்ட மன்னர் அவரது கண்களை அவித்து விட்டதாக ஒரு கதை உலவுகிறது. தொடையில் வடுவுள்ள அரசியின் சிற்பத்தை புதுமண்டபத்தில் தேடிக் கண்டுபிடித்துப் புகைப்படம் எடுத்த சம்பவத்தையும் சுவை பட அகத்தியம் திரு.ஜெ பி அவர்கள் அகத்தியம் மடலாற்குழுவில் எழுதியுள்ளார்கள். அந்த அரசியின் புகைப் படத்தை அவரது அகத்தியம் மடலாற்குழு நூலிலும் வௌதயிட்டுள்ளார்.
இத்தாலிய, முகலாய, இந்திய ஆகிய மூவகைக் கட்டிடக் கலைகளின் சிறப்புகளை ஒருங்கே இணைத்து இந்த அரண்மனையை வடிவமைத்துள்ளார். சுண்ணாம்பு, வெல்லச்சாறு, வஜ்ரம், செங்கல் போன்றவை கொண்டு இரும்புத் தூண்களின் உதவியின்றியே இந்த அழகிய அரண்மனை கட்டப் பட்டுள்ளது. இந்த அரண்மனையில் சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்ற இரு பகுதிகளும், அந்தப்புரம், நாடக சாலை, படைக்கலன்கள் வைக்கும் இடம், ஊழியர் வசிக்குமிடம், பூஜை செய்யக் கோவில், வசந்த் வாவி, பதினெட்டு வித இசைக் கருவிகள் வைக்கும் இடம், பூங்காக்கள், அரியணை மண்டபம் என்று ஒரு அரண்மனைக்குரிய அனைத்துப் பகுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதில் சொர்க்க விலாசத்தில் திருமலை நாயக்கரும், ரங்க விலாசத்தில் அவர் தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்திருக்கின்றனர். பெரிய மதில் சுவர்களுடன் 900 அடி நீளம், 660 அடி அகலம், 40 அடி உயரம் என்று மிகப் பெரிய அரண்மனையாகக் கட்டப்பட்டுள்ளது. திருமலை நாயக்கருக்குப் பின் வந்த சொக்கநாத நாயக்கர் திருச்சிக்குத் தலைநகரை மாற்றும் பொழுது ஒரு சில பகுதிகளை இடித்து விட, மழையிலும், காற்றிலும் மீதியுள்ள பகுதிகள் அழிந்து போக, இப்பொழுது சொர்க்க விலாசம் என்ற பகுதியும், நாடக சாலை என்ற நடனசாலையும் மட்டுமே மிஞ்சியுள்ளன. இதன் கிழக்குப் பகுதியில் ரங்க விலாசத்தின் எஞ்சியுள்ள பத்து தூண்கள் மட்டும் இன்னும் ஒரு தெருவில் மிச்சமுள்ளது. 18 வகை இசைக்கருவிகள் வாசிக்கப்பட்ட இடம் இன்று நவபத்கானா தெரு என்று மஹாலை ஒட்டி இருக்கிறது.
நாயக்க வம்சத்திற்குப் பின்னர் வந்த நவாப், மராட்டிய அரசர்கள் இதை படைக்களன்கள் தங்கும் இடமாக மாற்றியுள்ளனர். பின்னர் பிரிட்டிஷ் காரர்கள் இந்த இடத்தை நீதி மன்றமாகவும், அரசு அலுவலகங்களாகவும் மாற்றியுள்ளனர். 1971 வரை இது அரசாங்க அலுவலகமாகவும் கோர்ட்டுகளாகவுமே தமிழ்நாட்டு அரசாலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. 1868ல் கவர்னர் நேப்பியர் இந்த அரண்மனையின் எழிலில் மயங்கி மிகப் பெரிய முயற்சிகள் எடுத்து பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கெஞ்சிக் கூத்தாடி இந்த அரண்மனையின் மிச்ச மீதிகளை இடிந்து விடாமல் கட்டிக் காப்பாற்றியுள்ளார். நேப்பியரின் கலை ரசனையினாலே இந்த அரண்மனை இன்றும் பிழைத்து நிற்கிறது, இல்லாவிடில் இன்று துணிக்கடைகள் நிறைந்த ஒரு கடை வீதியாகவோ, அப்பார்ட்மென்ட் காம்ப்ளக்ஸாகவோ, லாட்ஜுகளாகவோ மாறியிருந்திருக்கும். பின்னர் தமிழ் நாட்டு அரசுக்கும் பழைய பாரம்பரிய சின்னங்களை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்று நல்ல புத்தி தோன்றி, இந்த இடம் மேலும் பல மராமத்து வேலைகளைக் கண்டு இன்று இதன் எழிலைக் கண்டு ரசிக்கும் வண்ணம் அழகிய ஒரு நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டுள்ளது. ஒரு பிரிட்டிஷ் கவர்னர் நேப்பியருக்கு இருந்த அக்கறை கூட நமது அரசியல்வாதிக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் நாம் இன்றும் இழந்து கொண்டிருக்கும் எண்ணற்ற பாரம்பரியச் சின்னங்கள்.
முற்றத்தையும் தாழ்வாரத்தையும் கடந்து நாடகசாலை என்ற பகுதிக்குச் சென்றோம், இருளடைந்து காணப்படுகிறது நாடகசாலை. அரண்மனையின் மிகவும் கலை நுட்பம் நிறைந்த , எழிலார்ந்த மண்டபம் இந்த நாடகசாலை; ஆனால் பகல் பொழுதிலேயே இந்த மண்டபம் இருளடைந்து கிடப்பதால் அதன் முழு அழகையும் கண்டு ரசிக்க முடிவதில்லை. இந்த நாடகசாலையின் நடுவே ஒரு முற்றம் உள்ளது. முற்றத்தைச் சுற்றிய உயர்ந்த பகுதியிலும், மேலே உள்ள உப்பரிகைகளிலும் அமர்ந்து நடுவே உள்ள தளத்தில் நடைபெறும் நடன நாடக நிகழ்ச்சிகளை மன்னரும், அரசிகளும், மந்திரிகளும் கண்டு ரசித்துள்ளனர்.
இந்த இடத்தில் ஒரு சிறிய அருங்காட்சியகத்தையும் வைத்துள்ளார்கள். முதுமக்கள் தாழிகள், பனையோலைச் சுவடிகள், அந்தக் கால மதுரையின் ஓவியங்கள், மண்பாண்டங்கள், சிற்பங்கள், ஆயுதங்கள், செப்புக் காசுகள், ஓவியங்கள் என்று ஏராளமான அரிய பொருள்களை காட்சிக்கு வைத்துள்ளார்கள். எங்களுக்கு முன்பு பார்வையிட்டுக் கொண்டு சென்ற ஏதோ ஒரு ஆசிரியப் பயிற்சி மாணவிகள் ஒவ்வொரு கலைப்படைப்பு வைத்திருந்த மேடையிலும் தங்கள் கையொப்பத்தைப் பதித்துக் கொண்டிருந்தனர் பேனாவால். ஒவ்வொரு அரும் பொருள் காட்சிப் பெட்டகத்தின் மேலும் இது போன்ற ஆயிரக்கணக்கானோர் தங்கள் கையொப்பத்தைப் பதித்துச் சென்றுள்ளனர். திருமலை நாயக்கர் கட்டிய அரண்மனை காலத்தைக் கடந்து நிற்பது போல இவர்கள் கையெழுத்தும் நிற்கும் என்று நினைப்பு போலும், நமது மக்களுக்கு பழமைச் சின்னங்கள் குறித்தும் பாரம்பரிய பெருமை குறித்தும் பாடப் புத்தகங்களில் தனியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். நாங்கள் வீடியோ எடுப்பதைப் பார்த்து விட்ட அந்த பெண்கள் மிகவும் வெட்கமடைந்து ஓடிப் போய் விட்டனர். தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறார்கள்.
அருங்காட்சியகம் உள்ள் இந்த நாடகசாலையைக் காணக் கண்கோடி வேண்டும். இதன் மேல்புறத்தில் அரசிகளும் பிறரும் அமர்ந்து நாடகத்தையும் நடனத்தையும் ரசிக்க உப்பரிக்கைகள் உள்ளன. இதன் உப்பரிகைகளும், மேற்கூரையும் மிக மிக அழகிய வண்ணம் வளைவுகளுடனும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுடனும், அற்புதமான எழிலார்ந்த வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. ஆனால் முழுக்க பார்த்து நிறைவாக ரசிக்க இயலா வண்ணம் விளக்குகள் இல்லாமல் இருண்டு காணக் கிடைக்கின்றன. அந்தப் பகுதியின் எழில் கெடா வண்ணம் உரிய விளக்குகளை, உரிய அமைப்பில் ஏன் அமைக்கவில்லை எனத் தெரியவில்லை. ஒரு வேளை இன்னொரு திருமலை மன்னர் பிறந்து வர வேண்டிக் காத்திருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. மன்னர் அரண்மனையைக் கட்டி தீப்பந்த விளக்கு வௌதச்சத்தில்தான் நடனம், மற்றும் பிற கூத்துக்களைக் கண்டு ரசித்துள்ளார்; ஆகவே இப்பொழுதும் அதே வௌதச்சம் போதும் என முடிவெடுத்துவிட்டனர் போலும். அரண்மனையின் ஒரு பகுதியில் மன்னரின் சவாலை ஏற்று கன்னம் வைத்து உள்ளே ஒரு திருடன் இறங்கிய இடம் உள்ளது. நாடகசாலையை அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணம் விளக்குகள் அமைத்து சிறப்பாக எடுப்பாக காட்சிக்கு வைக்க தமிழக அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இதற்கு மேல் இன்னும் ஒரு சில பகுதிகளுக்குச் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. பிற பகுதிகள் அழிந்து போயினமையினால் இது ஒரு அரண்மனை என்று சொன்னால் நம்பக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என் பெண்ணிற்கு ராஜாவின் படுக்கையறை, ராணிகளின் மேக்கப் அறை, சமையலறை எல்லாம் பார்க்காமல் ஒரு திருப்தி இல்லாமல் வௌதயே வந்தாள். பெட்ரூம் இல்லாமல் இது என்ன பெரிய பேலஸ் என்று குறைபட்டுக் கொண்டே வ்ந்தாள். அவளுக்கு ராஜாவின் அரியணையை பிரிட்டிஷ்காரர்கள் திருடிக் கொண்டு சென்று விட்டதில் பெரும் கோபம். அது எப்படி அவர்கள் எடுத்துச் செல்லலாம் என்று கடுமையாகக் கோவித்துக் கொண்டாள். கஷ்டப்பட்டு திருப்பிக் கொணரப் பட்ட அரியணையிலும் சிலந்தி குடியிருப்பதில் அவளுக்கு ஒப்புதல் இல்லை. எதிரே ஏதோ ஒரு பள்ளிச் சிறுவர்கள் அரண்மனையைப் பார்த்து விட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்தனர். நினைவுச் சின்னங்கள் முழுக்க தங்கள் கையெழுத்தைப் பதித்துக் களைத்துப் போன பயிற்சிக் கல்லூரிப் பெண்களோ, அடி குழாயில் முகம் அலம்பி, புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர். உப்பரிகைகளிலும், டநூம்களிலும் நூற்றுக்கணக்கான புறாக்கள் அங்குமிங்கும் கோஷ்டியாகப் பறந்து கொண்டு அரண்மனைக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. பறவைகளுக்கும், மனிதர்களுக்கும், சிலையாய் நின்ற திருமலை நாயக்கருக்கும் இன்னொரு நாள் கழிந்து கொண்டிருந்தது.
அரண்மனையைச் சுற்றிப்பார்த்துவிட்டு வௌதயேற மனமில்லாமல் இன்னுமொரு முறை சுற்றி வந்தோம். உள்ளே ஏறும் படிக்கட்டுகளில் வௌ஢ளைக்கார சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று அமர்ந்து கொண்டு ஏகாந்தமாக கஞ்சாவோ, சிகரெட்டோ புகைத்துக் கொண்டிருந்தார்கள். எந்த ஊர்க் காரர்கள் என்று கேட்கவில்லை. வேறு எந்த நாட்டிலும் இது அனுமதிக்கப் பட்டிருக்காது இந்தியாவைத் தவிர. அரியணைக்கு ஏறும் இடத்தில் திருமலை நாயக்கரின் மந்திரிப் பிரதானிகள் போல நாங்களும் சற்று நேரம் அமர்ந்திருந்தோம். இத்தனை பெரிய மன்னரின் முன்னால் இந்த இடத்தில்தானே குமரகுருப் புலவர் பிள்ளைத் தமிழ் இயற்றியிருப்பார், இந்த இடத்தில்தானே பாதிரிகள் கிறிஸ்துவம் பரப்ப அனுமதி வேண்டியிருப்பார்கள், இந்த இடத்தில்தானே இந்த இந்தக் கோவில்களுக்கு இவ்வளவு பொன்னும் மணியும் என்று அளந்து கொட்டியிருப்பார், இந்த இடத்தில் அமர்ந்துதானே மீனாட்சி அம்மனின் அருளை செங்கோலை அரியணையில் வைத்து இறைஞ்சியிருப்பார், இங்குதானே தளபதி தளவாய் இராமய்யனுக்கு போர்க்காலக் கட்டளாகள் கொடுத்திருப்பார் என்று வரலாற்று நிகழ்வுகள் மனக்கண் முன்னே கலைந்து போன சித்திரமாய் ஓடின.
வௌதயே போய் விட்டு மீண்டும் இரவு ஒலி ஔதக் காட்சி பார்க்க வரலாம் என்ற திட்டத்துடன் வௌதயேறினோம். இப்பொழுது வெறும் கரிய நிறச் சிலையாக நின்று கொண்டிருந்த திருமலை நாயக்கரின் மீதும் ஒரு வித பயங்கலந்த பிரமிப்பும், மரியாதையும் தோன்றியது. சிலையின் கீழே திறந்து வைத்த சிறுசேமிப்புத் துறைத் தலைவர் எஸ் எஸ் ராஜேந்திரன் பெயரும், எம்.பி.ஏ.ஜி.சுப்புராமன் பெயரும் பெரிதாகப் பொறிக்கப் பட்டிருந்தன. அரண்மனையின் பிரமாண்டம் முன் இந்த விளம்பரம் அற்பமாகத் தெரிந்தது. வானம் இருண்டு கொண்டு, மேகம் சூல் கொண்டு, உறுமிக் கொண்டிருந்தது. எதிரே சாதாரண மானிடர்கள் கட்டிய இன்றைய கட்டிடங்கள் 16ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை பறைசாற்றிக் கொண்டிருந்தன. எனக்கென்னவோ மதுரை அதிகம் மாறியிருப்பதாகத் தோன்றவில்லை, சொற்ப மாறுதல்கள் செய்தால் திருமலை மன்னரின் மதுரை மீண்டு வந்து விடும். வௌதயே சென்ற நாங்கள் இயற்கையின் இடி மின்னல் காண்பித்த ஒலி ஔதக் காட்சியினால் மீண்டும் அரண்மனைக்குத் திரும்ப முடியாமல் வீடு போய்ச் சேர வேண்டியதாயிற்று.
எத்தனையோ மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எல்லாம் மண்ணோடு மண்னாகி அழிந்து போய் விட இந்த மன்னர் திருமலை நாயக்கர் கட்டிய அரண்மனையும் அவரது பெயரும் இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது. அவர் கோவில்களுக்குச் செய்த புண்ணியங்களும் திருப்பணிகளும் வீண் போகவில்லை போலும். இன்று தென்னிந்தியாவின் தொன்மையான அரண்மனைகளில் மிகுந்த எழிலோடு மீதமிருக்கும் ஒரு முக்கியமான கலைச் சின்னம் இந்த் அரண்மனை. மூன்று வகைக் கட்டிடக் கலைகளின் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது இந்த மஹால்.
இவ்வளவு பெரிய அமைப்புகளை நிறுவிய மன்னரின் சிலைகள் எதுவும் மதுரையின் மத்தியப் பகுதிகளில் காணப்படுவதில்லை. கோவில்களில் உள்ள திருவாச்சிகளிலும், தூண்களிலும் மட்டுமே காணக் கிடைக்கின்றன. இவரை விட பிருமாண்டமான சின்னங்களை எழுப்பிய அரசர்களின் சிலைகளும் காணாமல் போய்விட, தமிழ்நாட்டில் முக்குக்கு முக்கு என்னவோ திராவிடக் கட்சியின் காவலர்களின் சிலைகளுக்கு மட்டும் பஞ்சமேயில்லை. சோழனும், பாண்டியனும், சேரனும், நாயக்க மன்னர்களும் ஓரமாய் ஒதுங்கிக் கிடக்க, பகட்டிலும் புரட்டிலும், பொய்மையிலும், சினிமா மாயையிலும் மக்களின் மூளைகளை மழுங்க வைத்து ஊரைச் சுருட்டிய உத்தமர்களுக்கோ ஊர் முழுக்கச் சிலைகள்; ஏதோ இவர்கள்தான் தமிழ் நாட்டையே கண்டு பிடித்து நிர்மாணித்தவர்கள் போன்ற பாவனையில் பல்வேறு போஸ்களில் காட்சியளிக்கிறார்கள். நவீன தமிழகத்தின் சரித்திரச் சின்னங்களான இந்தச் சிலைகளை நாஞ்சில் நாடன் தன் சிறுகதை ஒன்றில் பின்வருமாறு நக்கலடித்திருப்பார்.
'பணப் பிரிப்புக்குப் போகிற சீட்டுக் கம்பெனி ஊழியன் போல கையில் ஒரு பையோடு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் போல கைக்கிடையில் இடுக்கிய பையோடு, கல்லூரி பேராசிரியர் போல கையில் புத்தகங்களோடு, கொன்று போடுவே அல்லது அவசரமாய் ஒன்றுக்குப் போக வேண்டும் என்பது போல விரலை உயர்த்திக் கொண்டு, சட்டையில்லாமல் கண்ணாடி போட்ட கணக்கப் பிள்ளை போல சம்மணம் போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டையே அவர்தான் கண்டு பிடித்தார் என்று நாளைய வரலாற்றாசிரியர்கள் பதிவுச் செய்யச் சான்றாக...'
திருமலை நாயக்கரின் சாதனைகளைக் கண்டு விட்டு திரும்பும் வழியில் இந்த அற்பச் சிலைகளை மூலைக்கு மூலை கண்டு எரிச்சலும், விரக்தியும் மனதில் மண்டித் ததும்பின.
மதுரையின் இதயமான மீனாட்சி அம்மன் ஆலயத்தையும் புது மண்டபத்தையும் அடுத்த பதிவில் பார்த்த பின் எனது பயணத்தை முடித்துக் கொள்வேன். இன்னும் ஒரே ஒரு பதிவை மட்டும் பொறுத்துக் கொள்ளவும்.
என்னடா பயணக் குறிப்பு எழுதுறாரே ஆனால் திருமலையின் படத்தை ஒரு பதிவிலும் காணோமே என்று என்ற சந்தேகம் படிப்பவர் எல்லோர் மனதிலும் நிழலாடா விட்டாலும், நண்பர் சந்திரசேகர் மட்டுமாவது திருமலையை ஒரு படத்திலும் காணோமே என்று கேட்டிருந்தார். அவர் ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில் இந்த பதிவில் புகைப்படத் தொகுப்பில் முதலாவதாக திருமலையின் படத்தினை இட்டுள்ளேன். பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.
திருமலை நாயக்கர் மஹாலின் அற்புத எழில் தோற்றங்களை இங்கு காணலாம்.

No comments: