Monday, July 14, 2008

வண்டலூர்

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வெளிநாடுகளிலிருந்து 2 நீர்யானைகள் வரவழைக்கப்பட உள்ளது. . இந்த பூங்காவில் ஏற்கனவே 2 ஆண் நீர்யானைகள் உள்ளன. தற்போது பிரான்சில் உள்ள லிசிக்ஸ் செர்சா உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் நீர்யானையும், லண்டனில் உள்ள மார்வல் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் நீர்யானையும் கொண்டு வரப்பட உள்ளதாக அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குனர் மிகார் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறியவகை உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், அது கிடைத்த ஒரு சில மாதங்களில் இரண்டு நீர்யானைகளும் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நீர்யானைகளுக்கு நீலநாக்கு உள்ளிட்ட நோய்கள் உள்ளதா என்று பரிசோதித்த பிறகே, அவை அழைத்துவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டு ஒரு ஜோடி நீர்யானைகள் ஹோனோ லுலுவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு குட்டி ஈன்ற பெண் நீர்யானை இறந்து விட்டது.
சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் வண்டலூர் உயிரியல் பூங்காவின் வண்ணத்துப்பூச்சிகளுக்கான பிரத்யேக பூங்கா ஒன்றை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மிகார் ரஞ்சன் கூறினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இது ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார். 2009ம் ஆண்டில் இரவு நேர சபாரி அறிமுகப்படுத்தப்படும் என்று மாநில அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இங்குள்ள சிங்கங்களை காண்பதற்காக நடத்தப்படும் சபாரி, பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: