Monday, July 14, 2008

முஸோரி

சுற்றுலாத்தலம் - முஸோரி, உத்திரப்பிரதேசம்
பலவித காட்டு மலர்கள் அழகு செய்யும், பச்சை மரகத மலைகளில் அமைந்த மலை வாசஸ்தலம் முஸோரி. பனிமூடிய கம்பீரம் நிறைந்த இமயச் சிகரங்களை முஸோரியிலிருந்து பார்க்க முடியும். ஒரு புறம் மோனத் தவத்தில் நெடிது உயர்ந்து நிற்கும் மலைச் சிகரங்கள். மறுபுறம் பசுமை தவழும் டூன் பள்ளத்தாக்கு, ரூர்கி ஸஹரண்பூர், ஹாரித்வார் செல்லும் பாதைகளையும் இங்கிருந்து காணலாம். முஸோரி மணோகரமான காந்தருவ உலகம் போன்று நிகழ்கிறது.
1827-ல் காப்டன் யங் என்ற துணிச்சலான ராணுவ அதிகாரி, அடுக்கு மலைகளுக்கிடையே இந்த அழகிய இடத்தைக் கண்டறிந்து, மலைவாசஸ்தலமாக அமைப்பதற்காகத் திட்டமிட்டார். வட இந்தியாவில் மிகப் பிரசித்தி பெற்ற மலைவாசதலம் முஸோரி. ரம்மியமான இயற்கைக் காட்சிகளுக்கும், மகிழ்ச்சி குலுங்கும் சமூக வாழ்க்கைக்கும் புகழ் பெற்றது. வௌதநாடுகளிலிருந்து வருவோருக்கும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் இங்குண்டு. தலைநகர் தில்லியிலிருந்து முஸோரி வரை சாலை உள்ளது. மலைச் சிகரங்களுக்கிடையே உள்ள புனித தீர்த்தத் தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களுக்கு முஸோரி வழியாகத் தான் செல்ல வேண்டும்.
சுற்றுலாப் பயணத்திற்குச் சிறந்த இடங்கள் :
கன் ஹில்: முஸோரியை அடுத்துள்ள உயர்ந்த மலைகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்த இடத்துக்குக் கயிற்றுப்பாதை வழியாகச் செல்லலாம். 400 மீட்டர் நீளமுள்ள இந்தக் கயிற்றுப் பாதையில் ஊசலாடிச் செல்வது மெய் சிலிர்க்கச் செய்யும். சுதந்திரத்திற்கு முன்பு, இந்த மலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பீரங்கியிலிருந்து நண்பகல் நேரத்தில் குண்டு வெடிக்கப்படுவது வழக்கம், முஸோரி மற்றும் அருகில் வசிக்கும் மக்கள், தங்கள் கடிகாரத்தைச் சரிசெய்து கொள்வார்களாம். இதன் காரணமாக இந்த மலை பீரங்கி மலை (கன் ஹில்) என்றழைக்கப்படுகிறது. கன்ஹில்லிருந்து இமயமலையின் பல தொடர் மலைகளைக் காண முடியும். பந்தர் பஞ்ச், ஸ்ரீகாந்தா, பித்வாரா மற்றும் கங்கோத்ரி மலைத் தொடர்களையும், கீழே முஸோரி நகரம் மற்றும் டூன் பள்ளத்தாக்கையும் பார்க்க முடியும்.
கெம்படி நீர்வீழ்ச்சி:
முஸோரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சக்ராதா செல்லும் பாதையில் உள்ளது. 4500 அடி உயர்ந்த இந்த மலைகளிலிருந்து இந்த அருவி விழுவது அழகிய காட்சி. நல்ல வெயில் நாளில், இந்த அருவியில் குளிப்பது மிகவும் சுகமான இனிய அனுபவம்.
முனிஸிபல் பூங்கா:
அழகிய இந்த வனம் பிக்னிக் போன்ற மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்றது. ஒங்காவின் நடுவில் ஒரு சிறிய ஏரியும் உண்டு, அதில் படகு விடுவதற்கான வசதியும் உண்டு நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பூங்காவுக்கு கை-ரிக்ஷா, குதிரை மற்றும் காரில் செல்ல முடியும். வேவர்லி-கான்வென்ட் சாலை வழியே இங்கு வந்தடைய 2 கி.மீட்டர் தான்.
சைலடர்ஸ் லாட்ஜ்:
லால்டிப்பாவுக்கு அருகில், முஸோரியை அடுத்துள்ள மலைகளில் மிக உயர்ந்த சிகரம் சுற்றுலா அலுவலகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவு நடந்து அல்லது குதிரை மீது செல்லலாம். இந்த இடத்திலிருந்து பனி மூடிய மலைகளின் அரிய காட்சி, மெய்சிலிர்க்கச் செய்யும். சக்திவாய்ந்த பைனாகுலர் இங்கு கிடைக்கும்.
ஒட்டக முதுகு சாலை :
குலர் பஜாரிலிருந்து தொடங்கி, லைடாரி பஜார்வரை உள்ள 3 கி.மீ. நீண்ட பாதை ஒட்டக முதுகு சாலை என்றழைக்கப்படுகிறது. இங்கிருந்து மலை வாயில் சூரிய அஸ்தமானக் காட்சி, கண்டு ரசிக்கத்தக்கதாகும். முஸோரி பப்ளிக் பள்ளிக்கருகிலிருந்து பார்த்தால், உண்மையாகவே இந்தச் சாலை, ஒட்டகத்தின் முதுகு போன்றே தோற்றம் தருவதைக் காணலாம்.
ஜாரிபான் அருவி:
முஸோரி-ஜாரிபானி சாலையில், முஸோரியிலிருந்து 8.5 கி.மீ. தொலைவில் உள்ளது பயணிகள், ஜாரிபான்வரை சுமார் 7 கி.மீ வரை பஸ்ஸிலோ, காரிலோ சென்று பிறகு 1.5 கி.மீட்டர் நடந்துதான் அருவியை அடைய முடியும்.
நாக தேவதை கோவில்:
முஸோரியிலிருந்து 6 கி.மீ தொலைவில் கார்ட் மக்கன்ஜி சாலையில் உள்ள புராதனமான கோவில். இந்த இடம் வரை வாகனங்கள் செல்ல முடியும். டூன் பள்ளத்தாக்கு மற்றும் முஸோரியின் அழகிய காட்சியினை இங்கிருந்து காணலாம்.
புறநகர் சுற்றுலா இடங்கள்:
யமுனா பாலம் : சக்ரதா-பார்கோட் சாலையில், முஸோரியிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. மீன்பிடிப்புக்குச் சிறந்த இடம். முஸோரியில் உள்ள டிவிஷனல் காட்டிலாகா அதிகாரியிடமிருந்து முன்னதாக அனுமதி பெற வேண்டும்.
நாக் டிப்பா:
முஸோரியிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. மலை ஏறும் பயிற்சிக்கு மிகச் சிறந்த இடம். முஸோரியைச் சூழ்ந்துள்ள மலைகளிலேயே இது தான் மிக உயர்ந்த சிகரத்தைக் கொண்டது. இதன் உயரம் 10,000 அடி. மலைமுகடு வரை இருண்ட காடுகளால் சூழப்பட்டது. முஸோரியிலிருந்து தத்பூர் வரை 34 கி.மீ. பஸ்ஸில் வரமுடியும். தத்பூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேவல்சராய் என்ற இடத்தில் காட்டிலாகா ஓய்வு இல்லம் உள்ளது. பதிவு உரிமை முஸோரியில் உள்ள டிவிஷனல் காட்டிலாகா அதிகாரி  நாக் டிப்பாவில் தங்குவதற்கேற்ற இடம் இல்லை. பந்த்வாரி, கோரக்புரி, கெம்ப்படி வழியாகத் திரும்பிவர முடியும்.
தானேல்டி:
முஸோரி-டெஹ்ரி சாலையில் முஸோரியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. வழியில் புரான்ஸ்சுந்தா என்ற இடத்திலிருந்து ஸன், தேவதாரு மரங்களடர்ந்த இமயமலைகளின் கம்பீரமான காட்சி, நெஞ்சை அள்ளும். வார இறுதி ஓய்வு நாட்களை அமைதியாகக் கழிப்பதற்கு ஏற்ற இடம் தனோல்டி. இங்கு சுற்றுலாப் பயணிகள் விடுதி உள்ளது. காட்டிலாகா ஓய்வு இல்லமும் உண்டு. ஆனால் அதில் தங்குவற்கான அனுமதியை முஸோரி டி.ஏப்.ஓ விடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
சுர்கந்தா தேவி:
முஸோரி-டெஹ்ரி சாலையில், முஸோரியிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. கட்டுகல் (தேவஸ்தலி) என்ற இடம் வரை பயணிகள் பஸ்ஸிலோ, காரிலோ செல்ல முடியும். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்துதான் செல்ல முடியும். 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலிருந்து இமயச் சிகரங்களின் அழகிய அடிவாரக் கட்சிகள் நெஞ்சை விட்டு அகலா.
லகா மண்டல்:
கெம்ப்பீ நீரருவியிலிருந்து லகாமண்டல் 75 கி.மீ. தொலைவில் முஸோரி யமுனோத்ரி சாலையில் உள்ளது. குவா என்னுமிடத்தில் வரை சுமார் 71 கி.மீ சாலையில் வந்தபின், பாலத்தின் வழியாக யமுனையைக் கடந்து செல்ல வேண்டும். இங்கு நூற்றுக்கணக்கான அழகிய புராதன சிற்பங்கள் உள்ளன. தொல்பொருள் இயல் கழகம் இவற்றைப் பராமாரித்து வருகிறது. பாண்டவர்களைக் கொல்வதற்காக, கௌரவர்கள் அரக்கு மாளிகை அமைத்தது இங்குதான் என்று கூறப்படுகிறது.
சம்பா:
தனோல்டியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது. பழமரச் சோலைகளுக்கிடையே வளைந்து செல்லும் பாதையில் பயணம் இனிமையான அனுபவம். சீசன் போது, ஆப்பிள் பழங்கள் மரம் கொள்ளாமல் பழுத்திருக்கும். வசந்த காலத்தில் ரோடோ டென்ட்ரான் பூக்களும் மற்றும் பழ மரங்களும் பூத்துக் குலுங்கி கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கின்றன. இங்கு சுற்றுலாப் பயணிகள் விடுதியும் உள்ளது.
தகவல் மையம்: சுற்றுலா அலுவலகம் உ.பி. சுற்றுலாத் துறை, திமால்.

No comments: