Monday, July 14, 2008

சென்னை

தமிழ்நாட்டில் சுற்றுலாவுக்கென்று பல இடங்கள் உள்ளன. இந்தியாவில் முதலில் உருவான பெரு நகரம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைதான். 1996 வரை மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையை எடுத்துக்கொண்டால், முதலில் ஞாபகம் வருவது அதன் அழகிய நீண்ட மெரினா கடற்கரை. மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட உலகின்
இரண்டாவது மிக நீண்ட கடற்கரை இதுதான். இதன் நீளமும் அகளமும் எவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியது.
ஈராயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த 1330 குறள்களைத் தந்த திருவள்ளுவருக்கு 1976ம் ஆண்டு வள்ளுவர் கோட்டம், பழந்தமிழ் கட்டிடக் கலை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள், மாதாகோவில்கள், மிருகக்காட்சிசாலை, நூலகங்கள் என்று பல சுற்றுலா இடங்கள் சென்னையில் உள்ளன.
சென்னையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் வடக்கில் மகாபலிபுரம் உள்ளது. இதன் கடற்கரையும், அதியழகிய பல்லவ சிற்பங்களும், கோவில்களும் சுற்றுலாப் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மாமல்லபுரம் என்னும் மகாபலிபுரம் 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. மாமல்லபுரம் வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன. இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன. மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை.
இந்தியாவின் பழைமையான நகரங்களில் ஒன்று மதுரை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை என்று சுற்றுலாவினரைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய உண்டு. ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபம் 1560ல் கட்டப்பட்டது.
ஆயிரங்கால் மண்டபத்தில் ஆச்சரியமூட்டும் இசைத் தூண்களுக்கான இரண்டு மாதிரிகள் இருக்கின்றன. மேலும் ஐந்து தூண்கள் வடக்கு ஆடி வீதியில் மொட்டை கோபுரத்திற்கு அருகில் உள்ளது. தட்டும்போது ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு வகையான ஒலியை எழுப்புவதை உணரலாம்.

No comments: